×

தமிழக மக்கள் மீதான அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி : ஆளுநர் ரவி நெகிழ்ச்சி

திருச்சி: தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான அன்பு, பாசத்திற்காக பிரதமர் மோடிக்கு தமிழக ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளார். அதிமுகவுடனான கூட்டணி முறிந்து 4 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று(செவ்வாய்கிழமை) தமிழகம் வந்தடைந்தார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து ரூ.19,850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடியின் வருகை குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,”புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு பிரதமர் மோடியை மனமார வரவேற்கிறேன். திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். விமானம், ரயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் திறந்து வைப்பார்.

தமிழ்நாட்டில் ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள ஐஜிசிஏஆர்-இல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎஃப்ஆர்பி) அவர் திறந்து வைக்கிறார். தமிழக மக்கள் மீதான உங்களின் அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும் நன்றி. தமிழகத்தின் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான உங்கள் அர்ப்பணிப்புக்கும் நன்றி.” என்று ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.

The post தமிழக மக்கள் மீதான அபரிமிதமான அன்புக்கும் பாசத்திற்கும் பிரதமர் மோடிக்கு நன்றி : ஆளுநர் ரவி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Governor Ravi Leschi ,Trichy ,Governor of ,AIADMK ,Airport ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...