×

ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம்: உள்ளூர் அதிகாரிகள் தகவல்

டோக்கியோ: பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான ஜப்பான், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நேற்றும் அங்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு ஒட்டுமொத்த நாட்டையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.புத்தாண்டு தினமான நேற்று நாடு முழுவதும் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 4.10 மணியளவில் இஷிகாவா மற்றும் நிகாட்டா மாகாணங்களை மையமாக கொண்டு திடீரென தொடர் நிலநடுக்கம் ஏற்பட்டது.

90 நிமிட இடைவெளிக்குள் 20-க்கும் மேற்பட்ட முறை அடுத்தடுத்து பூமி குலுங்கியது. குறைந்தபட்சமாக 4.0 ரிக்டர் புள்ளிகளில் இருந்து அதிகபட்சமாக 7.6 புள்ளிகள் வரை நிலநடுக்கங்கள் பதிவாகின.இதனால் ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, யமஹடா உள்ளிட்ட மாகாணங்கள் மொத்தமாக குலுங்கின. இதைப்போல தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. நிலநடுக்கத்தின் மையப்பகுதி இஷிகாவா மாகாணத்தின் வஜிமாவில் உள்ள நோட்டா பிராந்தியத்தில் இருந்தது.

அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதுடன், அவற்றில் விரிசல்களும் ஏற்பட்டன. சாலைகள், வீதிகள் இரண்டாக பிளந்தன.நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மின்சாரம் தடைபட்டதால் 33,500-க்கு மேற்பட்ட வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இந்த பேரிடரால் பல இடங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே அந்த இடிபாடுகளுக்குள் மக்கள் சிக்கியுள்ளனரா? என்பதை கண்டறியும் பணிகள் உடனடியாக தொடங்கப்பட்டன.பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலநடுக்க மீட்பு பணிகளுக்காக உள்ளூர் மீட்புக்குழுவினர் முதல் ராணுவம் வரை களமிறக்கப்பட்டன.

இந்த படையினர் தீவிரமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே நிலநடுக்கத்தால் பதற்றத்தில் உறைந்த மக்களுக்கு மேலும் ஒரு பேரிடியாக சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டது. நிலநடுக்கம் உலுக்கிய மாகாண கடற்பகுதிகளில் 5 மீட்டர் உயரம் வரை சுனாமி அலைகள் தாக்கக்கூடும் என ஜப்பான் புவியியல் ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதனால் கரையோர மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து கொக்கைடோ தீவு முதல் கியுசு தீவு வரை கரையோர மக்களை உடனடியாக வெளியேற்ற உள்ளூர் நிர்வாகங்களுக்கு பிரதமர் புமியோ கிஷிடா உத்தரவிட்டார். அதன்படி இந்த பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டன. மேலும் நிலநடுக்கம் மற்றும் சுனாமி குறித்த தகவல்களை மக்கள் அறிந்து கொள்வதற்காக அவசர கால மையம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை பிரதமரே நேரடியாக கண்காணித்து வந்தார்.

இந்நிலையில் நிலநடுக்கம் காரணமாக் இன்று அதிகாலை வரை 8 பேர் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே ஜப்பான் நிலநடுக்கத்தை தொடர்ந்து வடகொரியா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் கடற்பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி ரஷியாவின் ஷகலின் தீவு மற்றும் விளாடிவாஸ்டோக், நகோடா உள்ளிட்ட நகரங்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. இதைப்போல தென் கொரியாவின் காங்வோன் மாகாணத்திலும் மக்களை வெளியேற்றும் பணிகள் நடந்தன. எனினும் இந்த பகுதிகளில் சுனாமியால் குறிப்பிடத்தக்க பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

The post ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழப்பு.! மேலும் பலர் காயம்: உள்ளூர் அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Japan ,Tokyo ,Pacific Ocean region ,New Year's Day ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்