×

அரசு வழக்கறிஞர்களுக்கான வழக்கு கட்டணத்திற்கான பில்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பில்களுக்கு கூட கட்டணம் வழங்கப்படாதது ஏன்? தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அரசு வழக்கறிஞருக்கு கட்டணம் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் கட்டணம் வழங்குவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ள பொதுத்துறை செயலாளரை சிறப்பு செயலாளராக நியமித்து அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல, அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை உடனுக்குடன் வழங்குவதற்காக ஒவ்வொரு துறையிலும் துணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளை சிறப்பு அதிகாரிகளாக நியமித்ததுடன் அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணங்களை வழங்க இணையதளமும் அரசால் உருவாக்கப்பட்டது.

மூன்று மாதங்களுக்கு பின் இந்த புதிய நடைமுறையின் செயல்பாடு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத்தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஷஜிவ் குமார் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கடந்த செப்டம்பர் முதல் டிசம்பர் 15 வரை அரசு வழக்கறிஞர்கள் 4,638 கட்டண பில்களை சமர்ப்பித்துள்ளனர். அவற்றில் 943 பில்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதில் 8 பில்களுக்கான கட்டணங்கள் மட்டும் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட கட்டண பில்களில் ஒரு சதவீத பில்லுக்கு கூட கட்டணம் செலுத்தப்படவில்லை. நீதிமன்றம் அறிவுறுத்திய நடைமுறையை 3 மாதங்களாக செயல்படுத்தாதது அதிர்ச்சியளிக்கிறது. குறைந்தபட்சம் ஆயிரம் பில்களுக்கான கட்டணத்தையாவது தந்திருக்க வேண்டும். எனவே, ஏன் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பில்களுக்கு மட்டும் கட்டணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன, எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்பது குறித்து தலைமை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post அரசு வழக்கறிஞர்களுக்கான வழக்கு கட்டணத்திற்கான பில்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பில்களுக்கு கூட கட்டணம் வழங்கப்படாதது ஏன்? தலைமை செயலாளர் அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,CHENNAI ,Madras High Court ,Dinakaran ,
× RELATED விலங்குகள் நல வாரியத்துக்கு ஐகோர்ட் எச்சரிக்கை!!