×

விதிகளுக்கு முரணாக உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்த புதுச்சேரி அரசு உத்தரவுக்கு தடை: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளிக் கல்வித் துறையில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த பி.சரவணன், இறுதி பட்டியலில் தனது பெயர் இடம்பெறாததை எதிர்த்து தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் லிங்காரெட்டிபாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 2007ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை 2016ம் ஆண்டு முதல் வரன்முறைபடுத்த ஆளுனர் உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், 2022ம் ஆண்டு டிசம்பர் 9ம் தேதி புதிதாக நியமன உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இந்த ஆண்டு ஜனவரி 5ம் தேதி முதல் புதுச்சேரி காந்தி நகரில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக சரவணன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து நவம்பர் 27ம் தேதி பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி 54 வயதான சரவணன் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதித்துறை உறுப்பினர் எம்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சரவணன் ஆஜராகி, நியமனம் செய்யப்பட்ட இடத்தில் 3 ஆண்டுகளை நிறைவு செய்த பிறகே இடமாற்ற செய்ய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், விதிகளுக்கு முரணாக 11 மாதங்கள் மட்டுமே பணிபுரிந்துள்ள தன்னை இடமாற்றம் செய்துள்ளனர். வயதான மற்றும் உடல்நலக்குறைவுடன் உள்ள பெற்றோரை தனியாக விட்டுவிட்டு காரைக்கால் செல்ல முடியாது என்பதை கருத்தில் கொள்ளாமல் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார்.

அதற்கு, புதுச்சேரி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தனது கோரிக்கை தொடர்பாக முதலமைச்சரிடம் மனு அளித்துள்ளார். அந்த இடமாற்ற உத்தரவை தடை செய்யும்படி முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதால் எந்த தடை உத்தரவையும் தற்போதைய நிலையில் பிறப்பிக்க வேண்டாம் என்று கோரினார். இதனை ஏற்க மறுத்த தீர்ப்பாயம், சரவணனை புதுச்சேரியிலிருந்து காரைக்காலுக்கு இடமாற்றம் செய்து பள்ளி கல்வி பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத் தடைவிதித்து விசாரணையை பிப்ரவரி 20ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

The post விதிகளுக்கு முரணாக உடற்கல்வி ஆசிரியரை இடமாற்றம் செய்த புதுச்சேரி அரசு உத்தரவுக்கு தடை: மத்திய நிர்வாக தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Central Administrative Tribunal ,Chennai ,P. Saravanan ,Puducherry Union Territory School Education Department ,Lingarettipalayam ,Court ,Dinakaran ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு