×

டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் டேவிட் வார்னர் ஓய்வு

சிட்னி: பாகிஸ்தானுடன் நடக்க உள்ள 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற உள்ள ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர், ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர்(37). ஆஸி. அணிக்காக 2009ல் அறிமுகமான வார்னர் (37 வயது) டெஸ்ட், ஒருநாள், டி20 என 3 வகை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடி முத்திரை பதித்துள்ளார். இந்தியாவில் நவம்பர் மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பையுடன் அவர் ஓய்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆஸி. உலக கோப்பையை வென்ற நிலையிலும், அவர் ஓய்வு முடிவை அறிக்கவில்லை. இந்நிலையில் பாகிஸ்தானுடனான டெஸ்ட் தொடருடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். ஆஸி. 2-0 என முன்னிலை வகிப்பதுடன் தொடரையும் கைப்பற்றிவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் சிட்னியில் நாளை தொடங்குகிறது. இதுவே வார்னர் விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கும்.அவர் இதுவரை 111 டெஸ்டில் 8695 ரன் குவித்துள்ளார் (அதிகம் 335*, சராசரி 44.58, சதம் 26, அரைசதம் 36).

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வார்னர் கூறியதாவது: உலக சாம்பியன்ஷிப்-2023 போட்டிக்கு முன்பே நான் தெளிவாக சொன்னேன். என்னைப்பற்றியும், எனது ஆட்டத்திறன் பற்றியும் நிறைய விவாதங்கள் எழுந்தன. அதற்கு முடிவு கட்ட விரும்பினேன். உஸ்மானுடன் சில நல்ல இன்னிங்ஸ்களை விளையாடினேன். ஆனாலும் நான் விரும்பிய சதம் லார்ட்சில் கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் அணியாக சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன். அணியும், தேர்வாளர்களும் என்னை தள்ளிவைக்கும் நிலையை ஏற்படுத்த விரும்பவிலை. டெஸ்ட் மட்டுமல்ல… ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற முடிவு செய்துவிட்டேன். அதனால் சிட்னி டெஸ்டுடன் ஒருநாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவேன். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட அணி நிர்வாகம் விரும்பினால் அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு வார்னர் கூறியுள்ளார்.

* வார்னர் 161 ஒருநாள் போட்டியில் 6932 ரன் (அதிகம் 179 ரன், சராசரி 45.30, சதம் 22, அரைசதம் 33) அடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாடி வரும் அவர், துபாய் கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக நேற்று நியமிக்கப்பட்டார். சர்வதேச லீக் டி20 தொடரின் 3வது சீசன் அரபு அமீரகத்தில் (ஜன.20 – பிப்.18) நடைபெற உள்ளது.

The post டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளிலும் டேவிட் வார்னர் ஓய்வு appeared first on Dinakaran.

Tags : David Warner ,Sydney ,Aussies ,Pakistan Opener ,Dinakaran ,
× RELATED பிஷப்புக்கு கத்தி குத்து: 7 பேர் கைது