×

துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவு சேலம் பெரியார் பல்கலை.யை நிர்வகிக்க புதிய நிர்வாகக்குழு: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவாக உள்ள நிலையில், நிர்வாகக்குழு அமைக்க வேண்டும் என பேராசிரியர்கள், தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழக பணத்தை முதலீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் மீது, 8 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதில், துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்களை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுல்சயா யோஜனா திட்டத்திலும் நிதி முறைகேடு நடந்துள்ளது என்று மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதனிடையே, துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவாக உள்ள நிலையில், பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடக்கப்பட்டுள்ளது.

எனவே, புதிய நிர்வாகக்குழு அமைக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை செயலாளருக்கு, கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டுள்ள ஊழல், முறைகேடு மற்றும் விதிமீறல் புகார்கள் மிகுந்த கவலை அளிப்பதாக உள்ளது.

துணைவேந்தர் மற்றும் பதிவாளருக்கு எதிராக, போலி ஆவணங்கள் மற்றும் போலி கம்பெனிகள் உருவாக்கம், மோசடி, கூட்டுச்சதி, சாதிய இழிவு, பட்டியலின மாணவர்களின் நிதியை மோசடி செய்ததாக எழுந்துள்ள புகார்கள் உயர்கல்வியின் மாண்பை குலைக்கும் வண்ணம் உள்ளது. நடப்புக் கல்வி ஆண்டின் அடுத்த பருவம் இன்று (2ம் தேதி) தொடங்குகிறது. பல்கலைக்கழகத்தின் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், 150 ஆசிரியர்கள், 700 பணியாளர்கள், 125 இணைவு பெற்ற கல்லூரிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய நிர்வாகம் பல்கலைக்கழகத்தின் பொறுப்பில் உள்ளது. தற்போது துணைவேந்தரும் இல்லை, பதிவாளரும் தலைமறைவாக உள்ளார்.

நிபந்தனை ஜாமீனில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். எனவே, பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க மாற்று ஏற்பாட்டை அரசு உடனடியாகச் செய்ய வேண்டும். குறிப்பாக, பல்கலைக்கழக சட்டம் மற்றும் சாசன விதிகளின்படி, பல்கலைக்கழக ஆட்சிக்குழு கூடி, மூத்த பேராசிரியரையோ அல்லது நிர்வாகக் குழுவையோ அமைக்க வேண்டும். அதுதொடர்பாக பல்கலைக்கழக சட்ட விதி 12, பிரிவு 4 கூறுகிறது. எனவே, துணைவேந்தர் நிர்வாகக்குழுவை அமைக்க உயர்கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சிறப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க வேண்டும்
இதனிடையே, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக நிரந்தர பதிவாளர், தேர்வாணையர் இல்லை. பொறுப்பு அலுவலர்கள் மட்டும் நியமிக்கப்பட்டு வருவதால், நிர்வாகம் மிகுந்த சீர்கேட்டை எதிர்கொண்டு வருகிறது. எனவே, பல்கலைக்கழக நிர்வாகத்தினைச் சீர்செய்ய, தமிழ்நாடு அரசு, இந்திய ஆட்சிப்பணி அலுவலர் (ஐஏஎஸ்) ஒருவரை சிறப்பு அதிகாரியாக நியமித்து, ஊழல், முறைகேடு, விதிமீறலில் சிக்கித் தவிக்கும் பெரியார் பல்கலைக்கழகத்தை காப்பாற்ற வேண்டும், என அந்த கடித்தில் வலியுறுத்தியுள்ளனர்.

* தீனதயாள் திட்டத்தில் முறைகேடு: போலீசார் விசாரணை
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தில், முறைகேடு நடந்துள்ளதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர். இதுதொடர்பாக அந்த திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள், நேற்று முன்தினம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர். அந்த மனுவில்,‘ கிராமப்புற இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கும் வகையில், தீனதயாள் உபாத்தியாயா கிராமின் கவுசல்யா யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இம்மையத்தின் இயக்குனராக பொறுப்பு பதிவாளர் தங்கவேலும், பணியாளராக சசிகுமார், சாஜித், பரமேஷ்வரி ஆகியோரும் உள்ளனர். தங்களை இலவச கல்வி மற்றும் இலவச வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி இந்த மையத்தில் சேர்த்து கொண்டனர். நாங்கள்அனைவரும் பட்டியலின, பழங்குடியின, சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள். எங்களின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி, அதன் வங்கி பாஸ் புத்தகதையும், ஏடிஎம் கார்டுகளையும் வாங்கி வைத்து கொண்டனர்.

கடந்த 2021ம் ஆண்டு, ரூ.2.66 கோடி மதிப்பில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதில், ரூ.1.20 கோடியை வாங்கி விட்டனர். இத்திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் சிறுபான்மையினருக்கு உணவு, தங்குமிடம், வேலைவாய்ப்பு பயிற்சி ஆகியவை முற்றிலும் இலவசமாக அளிக்கப்படும். ஆனால் பல்கலைக்கழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பயிற்சியில் மாணவர்களுக்கு எந்தவித சலுகையும் வழங்கப்படவில்லை. எனவே இந்த திட்டத்தின் நிதியில் நடந்துள்ள மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும்,’என்று அதில் கூறியிருந்தனர். இந்த மனு மீது சேலம் மாநகர போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post துணைவேந்தர் கைது, பதிவாளர் தலைமறைவு சேலம் பெரியார் பல்கலை.யை நிர்வகிக்க புதிய நிர்வாகக்குழு: பேராசிரியர்கள், தொழிலாளர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Salem Periyar University ,Salem ,Booter Foundation ,Dinakaran ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்..!!