×

ஜாதி ஒடுக்கு முறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா? முத்தரசன் கண்டனம்

சென்னை: ஜாதி ஒடுக்கு முறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகில் உள்ள ராமநாய்கன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்கள் தேவேந்திரகுல வேளாளர் ஜாதிப்பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களது தந்தையார் சின்னையன் நாற்பது வருடங்களுக்கு முன்பு சுத்தக் கிரயம் மூலம் பெற்ற 6.5 ஏக்கர் நிலத்தை உழுது, சாகுபடி செய்து வாழ்ந்து வருகின்றனர்.

படிப்பறிவு குறைந்த, சமூகத்தில் அடித்தளத்தில் ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவில் உள்ள கண்ணையன், கிருஷ்ணன் சகோதரர்களை வஞ்சகமாக ஏமாற்றி, அவர்களது நிலத்தில் ஒரு பகுதியை அபகரிக்கும் நோக்கத்துடன் பாஜவின் அரசியல் செல்வாக்கு பெற்ற அதன் இளைஞர் அணி செயலாளர், சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்த குணசேகரன் போலி ஆவணம் தயாரித்து, ஏழை விவசாயிகளை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறார். குணசேகரனின் சட்டவிரோத செயல்கள் குறித்து காவல் துறையில் புகார் கொடுத்து, அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

நீதிமன்றக் காவலில் விசாரணை கைதியாக சிறையில் இருந்த குணசேகரன் பிணையில் வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கண்ணையன், கிருஷ்ணர் சகோதரர்களுக்கு கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறை நவம்பர் 27ம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. இதில் சகோதரர்களை “இந்து-பள்ளர்” என்று ஜாதி அடையாளப் படுத்தி அவமதித்துள்ளது. இது அப்பட்டமான தீண்டாமை குற்றச் செயலாகும்.அமலாக்கத்துறை விசாரணையில் வழக்கறிஞர் அனுமதிக்கப்படாமல் மறுக்கப்பட்டு, சகோதரர்கள் மிரட்டப்பட்டிருப்பது அதிகார அத்துமீறலாகும்.

பாஜவின் அரசியல் கருவியாக செயல்பட்டு வரும் அமலாக்கத்துறை, தற்போது ஜாதிய ஒடுக்கு முறைக்கும், நிலப்பறிப்பு மோசடிக்கும் ஆயுதமாக மாறியிருப்பது விசாரணை அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றாக தகர்த்து வருகிறது. அமலாக்கத்துறையின் அதிகார அத்துமீறலை வன்மையாகக் கண்டிப்பதுடன், பட்டியலின சமூகப் பிரிவு ஏழை விவசாயிகளான கண்ணையன், கிருஷ்ணன் நிலவுரிமை பாதுகாக்க களம் இறங்கி போராடும். இவ்வாறு முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post ஜாதி ஒடுக்கு முறைக்கும், நில அபகரிப்புக்கும் அமலாக்கத்துறை ஆயுதமா? முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Mutharasan ,Chennai ,Communist Party of India ,State Secretary ,Kannaiyan ,Ramanaikanpalayam Panchayat ,Attur, Salem District ,Dinakaran ,
× RELATED ஹிட்லரை பின்பற்றும் பிரதமர் மோடி: இரா.முத்தரசன் தாக்கு