×

‘எக்ஸ்போசாட்’ உட்பட 11 செயற்கைகோளை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை

சென்னை: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன விஞ்ஞானிகள் இந்த புத்தாண்டில் முதலாவது ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளனர். ‘எக்ஸ்போசாட்’ உட்பட 11 செயற்கைக்கோள்களை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. உலகின் 6வது மிகப்பெரிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் எஸ்.எஸ்.எல்.வி, ஏ.எஸ்.எல்.வி, பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி, எஸ்.எல்.வி. சந்திராயன் , ஆதித்யா உள்ளிட்ட பல்வேறு ராக்கெட்டுகளையும், செயற்கைக்கோள்களையும் விண்ணில் செலுத்தி உலகநாடுகளின் வரிசையில் தனக்கென தனி முத்திரையை பதித்து வருகிறது.

குறிப்பாக, கடந்தாண்டு நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி அனைவரது பார்வையையும் இந்தியாவின் பக்கம் உற்று நோக்கச் செய்தது. அதற்கு அடுத்தப்படியாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதை தவிர வெளிநாட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட்களை இஸ்ரோ வெற்றிகரமாக ஏவ உதவியாக இருந்துள்ளது. அந்தவகையில் இந்தாண்டுக்கான முதல் ராக்கெட் செலுத்துவதற்கான ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வந்தன. இதனையடுத்து 2024ம் ஆண்டிற்கான முதல் ராக்கெட்டாக பிஎஸ்எல்வி விண்ணில் செலுத்த கடந்த 30ம் தேதி காலை 8.10 மணிக்கு கவுண்டவுன் தொடங்கியது.

அந்தவகையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து நேற்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 என்ற ராக்கெட் ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் ஏவப்பட்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைகோள் பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. மேலும், இந்த செயற்கைகோள் எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துளைகள் வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ ஆகியவற்றை பற்றி விரிவாக ஆய்வு மேற்கொள்ள உள்ளது.

இந்த எக்ஸ்போசாட் மட்டுமின்றி, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்ப வெப்ப நிலையை அறிந்து கொள்வதற்கான ‘வெசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தனர். அந்தவகையில் பெண்களின் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் செயற்கைக்கோள் என்ற பெருமைபெற்ற இந்த செயற்கைகோளுடன் மேலும் வெளிநாடுகளை சேர்ந்த 10 செயற்கை கோள்களும் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இந்தாண்டு முதலாவதாக ஏவப்படும் பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் 44.4 மீட்டர் உயரத்தையும், 260 டன் எடையை கொண்டவையாக இருந்தன. வெற்றிகரமாக ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதையடுத்து இஸ்ரோ விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டனர். இந்த நிகழ்வினை காண்பதற்காக ஸ்ரீ ஹரிகோட்டாவில் பொதுமக்கள், மாணவர்கள் என 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் குவிந்திருந்தனர்.

* இஸ்ரோவின் 60வது பி.எஸ்.எல்.வி
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த 1993ம் ஆண்டு முதல் பிஎஸ்எல்வி ராக்கெட்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் 60வது பிஎஸ்எல்வி ராக்கெட்டை இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்ணில் செலுத்தி உள்ளனர். இதில் 58 பிஎஸ்எல்வி ராக்கெட்டுகள் வெற்றிகரமாகவும் 2 (பி.எஸ்.எல்.வி டி-1, பி.எஸ்.எல்.வி சி – 39) ராக்கெட்டுகள் தோல்வியிலும் முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* 22 நிமிடத்தில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைகோள்கள்
பி.எஸ்.எல்.வி சி – 58 ராக்கெட் சரியாக காலை 9.10 மணிக்கு செலுத்தப்பட்ட நிலையில் 22 நிமிடத்தில் சுமார் 469 கிலோ எடைகொண்ட செயற்கைகோள்களை சுமந்தபடி 650 கி.மீ தொலைவில் புவி வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

* அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சூரியனின் கருந்துளைகளை ஆய்வு செய்யும் அந்தஸ்தை பிடித்த இந்தியா: இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதம்

பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியபின் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது: 2024ம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ம் தேதி வெற்றிகரமாக பிஎஸ்எல்வி ராக்கெட் ஏவபட்டுள்ளது. திட்டமிட்ட புவிவட்டத்தில் செயற்கைகோள் நிலைநிறுத்தப்பட்டது. செயற்கைகோளின் சில பகுதிகள் 350 கி.மீ திட்டமிட்ட புவிவட்டத்தில் கீழே கொண்டு வரப்படும். இதனால் விண்வெளி கழிவுகளை ஏற்படுத்தாமல் இருக்க முடியும்.

மேலும், ராக்கெட்டில் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் செயற்கைக்கோள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தின் 10 பேலோட்ஸ் (payloads) உடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது. அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நடப்பாண்டில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி உள்ளிட்ட பல ராக்கெட்கள் ஏவப்பட இருக்கிறது.

பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட்டில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை தரும் செயற்கைக்கோள் இடம் பெற்றுள்ளதால், உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சூரியனின் கருந்துளைகள், நியூட்ரான் நட்சத்திரங்கள் பற்றி ஆராய பிரத்யேக செயற்கைக்கோளை அனுப்பிய 2-வது நாடு என்ற அந்தஸ்தை இந்தியா பெற்றுள்ளது. ககன்யான் திட்டத்தை பொறுத்தவரை அடுத்தாண்டு மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். ஆதித்யா விண்கலம் ஜன 6ம் தேதி எல் 1 புள்ளியை வந்தடையும். இந்தாண்டு மாதம் ஒரு ராக்கெட் என குறைந்தது 12 ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என கூறினார்.

The post ‘எக்ஸ்போசாட்’ உட்பட 11 செயற்கைகோளை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது: இந்த ஆண்டுக்கான முதல் ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவி இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Indian Space Research Organization ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...