×

படிக்க தெரியாத விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க பாஜ நிர்வாகி சதி; ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார்

சென்னை: பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் உதவி பெறும் விவசாயிகளுக்கு ‘ஜாதி’ பெயரை குறிப்பிட்டு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது டிஜிபியிடம் அளித்த புகாரின் மீது நுங்கம்பாக்கம் போலீசார் தனது விசாரணையை நேற்று ெதாடங்கினர். முதற்கட்டமாக விவசாயிகள் தரப்பு வழக்கறிஞர் பிரவினாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் பகுதியில் 10 ஏக்கர் காலனி வடக்கு காடு என்று அழைக்ககூடிய காராமணி பகுதியை சேர்ந்தவர் சின்னையா. இவருக்கு கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் என்ற 2 மகன்கள் உள்ளனர். சின்னையா இறப்பதற்கு முன்பு 6.5 ஏக்கர் விளை நிலத்தை விலைக்கு வாங்கியுள்ளார். நிலம் தற்போது மகன்களான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதற்கிடையே சேலம் இருப்பாலை பகுதியை சேர்ந்த பாஜ சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன், கண்ணையன் மற்றும் அவரது சகோதரன் கிருஷ்ணனுக்கு சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை வாங்க முயற்சி ெசய்துள்ளார். ஆனால், நிலம் தனது தந்தை சின்னையா வாங்கியது என்பதால் அவரது ஞாபகமாக யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் என்று கூறி சகோதரர்கள் மறுத்துவிட்டனர். ஆனால் பாஜ நிர்வாகி குணசேகரன், படிப்பறிவு இல்லாத ஏழைகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் நிலத்தை விற்பனை செய்ய முன்பணமாக ₹1 லட்சம் பெற்றதாக போலியாக ஒரு பத்திரம் தயாரித்து, அதன் மூலம் அவர்களின் 6.5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணையன் மற்றும் அவரது சகோதரர் கிருஷ்ணன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எனினும் குணசேகரன் தொடர்ந்து அடியாட்களை வைத்து ஏழை சகோதரர்களை மிட்டியும், அவர்கள் 6.5 ஏக்கர் நிலத்தை பயிர் செய்யாதபடி தடுத்தும் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஜூன் 22ம் தேதி கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் ஒன்று பதிவு தபால் மூலம் வந்தது. ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து சம்மன் அனுப்பும் வகையில் நாங்கள் எந்த தவறும் செய்யவில்லையே என்று அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்களுக்கு தெரிந்த பெண் வழக்கறிஞர் பிரவினாவை அணுகினர். அவர் அதை பார்த்தபோது, அதில் ‘திரு.கண்ணன், ‘இந்து – பள்ளர்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் ‘பள்ளர்’ என்ற ஜாதி பெயர் ‘தேவேந்திர குல வேளாளர்’ என்று மாற்றப்பட்டு 2 ஆண்டுகள் ஆன நிலையில், ஒன்றிய அரசு எப்படி பள்ளர் என்று ஜாதி பெயரை குறிப்பிட்டிருந்தது. மேலும், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் கண்ணையா மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் ‘ சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் உங்களிடம் விசாரணை செய்ய வேண்டும். எனவே விசாரணைக்காக வரும் ஜூலை 5ம் தேதி சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு ஆஜராக வேண்டும். நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தை நாங்கள் ஜப்தி செய்வோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

பிரதமர் ஏழை விவசாயிகளுக்கு வழங்கும் ₹6 ஆயிரத்தை நம்பி வசித்து வரும் விவசாயிகளுக்கு எப்படி சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் சம்மன் அனுப்பப்பட்டது என்று வழக்கறிஞர் பிரவினா அதிர்ச்சியடைந்தார். அதைதொடர்ந்து 2 விவசாயிகளுடன் கடந்த ஜூலை 5ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கறிஞர் பிரவினா ஆஜரானார். அப்போது விவசாயிகளான கண்ணையன், கிருஷணன் ஆகியோரை மட்டுமே உள்ளே விசாரணைக்கு வரவேண்டும். உடன் யாரும் வரக்கூடாது என்று கூறி, வழக்கறிஞர் பிரவினாவை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை.

படிக்க தெரியாத விவசாயிகளின் வழக்கறிஞராகவே தான் நான் உடன் வந்தேன் என்று கூறி, விசாரணைக்கு தன்னை அனுமதிக்க கோரி பெண் வழக்கறிஞர் பிரவினா பல முறை வாதாடியும் அதிகாரிகள் ஏற்கவில்லை. பின்னர் கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய 2 விவசாயிகளும் வழக்கறிஞர் பிரவினா மூலம் பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை குறிப்பிட்டும், கிருஷ்ணன் தனது வங்கி கணக்கில் ₹500 மட்டுமே இருப்பு வைத்துள்ள நிலையில், அவருக்கு சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் எப்படி அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. விவசாயி கிருஷ்ணன் ஒன்றிய அரசின் 5 ஏக்கருக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டுக்கு ₹6 ஆயிரம் நிதி உதவி பெறும் நபராக உள்ளார். ரேஷன் கடைகளில் தான் அரிசி வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகிறார்.

அப்படி இருக்கும் போது, எந்த அடிப்படையில் ஏழை விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். பாஜ பிரமுகர் குணசேகரன் 6.5 ஏக்கர் நிலத்தை தனக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று மிரட்டி வரும் நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளதால், பாஜவின் முக்கிய பிரமுகர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகளின் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. எனவே சம்மன் அனுப்பிய, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் ரித்தேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் பிரபா, சந்திரன் உள்ளிட்டோர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

அந்த புகாரின் மீது விசாரணை நடத்த டிஜிபி சங்கர் ஜிவால் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, நுங்கம்பாக்கம் போலீசார், ஏழை மற்றும் எளிய படிக்க தெரியாத விவசாயிகளான கண்ணையன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோருக்கு, எந்த அடிப்படையில் ‘சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது? விவசாயிக்கு ஜாதி பெயரை குறிப்பிட்டு ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்பது குறித்து விசாரணையை நேற்று தொடங்கினர்.

முதற்கட்டமாக நுங்கம்பாக்கம் போலீசார் 2 விவசாயிகளுக்கு ஆதரவாக புகார் அளித்த பெண் வழக்கறிஞரான பிரவினாவிற்கு அனுப்பப்பட்ட சம்மனை தொடர்ந்து, அவரிடம் நேற்று மாலை நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, வழக்கறிஞர் பிரவினா ஏழை விவசாயிகளுக்கு ஜாதி பெயரை கூறி அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் கடிதம் உள்ளிட்ட ஆவணங்களை போலீசாரிடம் அளித்து, அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். அதைதொடர்ந்து ஓரிரு நாளில் விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகளை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post படிக்க தெரியாத விவசாயிகளின் நிலத்தை அபகரிக்க பாஜ நிர்வாகி சதி; ஏழை விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் appeared first on Dinakaran.

Tags : BJP ,CHENNAI ,Nungampakkam police ,DGP ,Dinakaran ,
× RELATED கடன் செயலி மூலம் வாங்கிய பணத்தை...