×

தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம்

சென்னை: முதன் முறையாக தீயணைப்புத் துறை பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரியா ரவிச்சந்திரன் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். பின்னர் 1999ம் ஆண்டு பொதுச்சேவை தேர்வை எழுதினார். தனது 26வது வயதில் நாகை மாவட்டத்தில் முதன் முதலில் தனது தீயணைப்புத்துறை பணியை தொடங்கினார். அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார்.

சென்னையில் பதவி ஏற்பதற்கு முன் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோட்ட அலுவலராக பணியாற்றியுள்ளார். 2003ல் தமிழக அரசின் குரூப் 1 அதிகாரியாக பணியில் சேர்ந்தார். தீயணைப்புத் துறையில் பணியாற்றி, இணை இயக்குநர் நிலைக்கு உயர்ந்தார். தன்னலமற்ற துணிச்சலான செயலை பாராட்டி அவருக்கு 2012ல் அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 2013ல் இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவைக்காக முதல்வர் விருது 2014ல் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் பணியாற்றும் பிரியா ரவிச்சந்திரன், மாநில அரசு அல்லாத சிவில் சர்வீசஸ் ஒதுக்கீட்டிலிருந்து ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. மாநில அரசுப் பணியில் இருந்து 2022க்கான ஐ.ஏ.எஸ், பிரிவு அதிகாரியாக அவர் மாநில அரசின் பரிந்துரைப்படி தேர்வாகியுள்ளார். தீயணைப்புத் துறையில் இருந்து ஒருவர் ஐ.ஏ.எஸ், அதிகாரியாக தேர்வாகியிருப்பது தமிழகத்தில் இதுவே முதல் முறையாகும்.

The post தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் பெண் அதிகாரி பிரியா ரவிச்சந்திரன் ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,department ,Priya Ravichandran ,Chennai ,Salem district ,Ethiraj College ,
× RELATED வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2...