×

திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வினியோகம்: சொர்க்கவாசல் தரிசனம் இன்று நிறைவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் தரிசனம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், இலவச சர்வ தரிசன டோக்கன்கள் நாளை முதல் மீண்டும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்கள் இலவச தரிசனத்தில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதை தவிர்ப்பதற்காக திருப்பதியில் இலவச சர்வதரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த 23ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தொடர்ந்து இன்றிரவு வரை பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க கடந்த 23ம் தேதி முதல் ஜனவரி 1ம் தேதி வரையிலான டோக்கன்கள் 10 நாட்களுக்கு ஒட்டுமொத்தமாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த டோக்கன்கள் மற்றும் ஆன்லைனில் வழங்கப்பட்ட ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே சொர்க்கவாசல் வழியாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்றிரவுடன் சொர்க்கவாசல் தரிசனம் நிறைவடைவதால் திருப்பதியில் உள்ள னிவாசன், விஷ்ணு நிவாசம், அலிபிரி பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய மூன்று இடங்களில் உள்ள கவுன்டர்கள் மீண்டும் திறக்கப்பட்டு நாளை அதிகாலை 4 மணி முதல் டோக்கன் வழங்கப்பட உள்ளது. இந்த டோக்கன் பெற்ற பக்தர்களுக்கு அதே நாளில் மதியம் 12 மணி முதல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர் என இதுகுறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023ம் ஆண்டில் ₹1,398 கோடி காணிக்கை
கடந்த 2023ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மொத்தம் 2.52 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் கோயில் உண்டியலில் காணிக்கையாக ₹1,398 கோடி செலுத்தினர்.

The post திருப்பதியில் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன் வினியோகம்: சொர்க்கவாசல் தரிசனம் இன்று நிறைவு appeared first on Dinakaran.

Tags : PARADISE GATE ,Thirumalai ,Tirupathi Eumamalaiaan Temple ,Swami ,Tirupathi Eumalayan Temple ,
× RELATED 8 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில்...