×

2024ன் முதல் செயற்கைகோள் ‘எக்ஸ்போசாட்’டை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: தூசு, கருந்துகள் வாயுக்களை ஆய்வு செய்யும், இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை: 2024ம் ஆண்டின் முதல் செயற்கைகோளான ‘எக்ஸ்போசாட்’டை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி சி-58 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது. 2023ம் ஆண்டு இஸ்ரோ தொடர்ச்சியாக பல சாதனைகளை செய்துள்ளது. குறிப்பாக நிலவின் தென் துருவத்தை ஆராயும் வகையில் சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தி உலக நாடுகளை உற்று நோக்கச் செய்தது. அதற்கு அடுத்தபடியாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக இஸ்ரோ தரப்பில் ஏவப்பட்டது. இதை தவிர வெளிநாட்டு பி.எஸ்.எல்.வி ராக்கெட்களை வெற்றிகரமாக ஏவ இஸ்ரோ உதவியாக இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது 60வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் ஏவ தயாராகிவிட்டது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று காலை 9.10 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி-58 என்ற ராக்கெட் ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை சுமந்தபடி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகள் ஆயுட்காலத்தை கொண்ட இந்த செயற்கைக்கோள் 650 கி.மீட்டர் வட்டமான பூமியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும், இந்த செயற்கைகோள் எக்ஸ்ரே மூலங்களின் தற்காலிக நிலை, நிறமாலை போன்ற அறிவியல் ஆய்வுகளையும், விண்வெளியில் உள்ள தூசு, கருந்துகள், வாயுக்களின் மேகக்கூட்டமான ‘நெபுலா’ உள்ளிட்டவற்றையும் ஆராய உள்ளது.

இதுமட்டுமின்றி, திருவனந்தபுரம் லால் பகதூர் சாஸ்திரி பல்கலைக்கழக மாணவிகள் பூமியின் மேல் பரப்பில் உள்ள புற ஊதா கதிர்கள் மற்றும் கேரள மாநிலத்தின் தட்ப வெப்ப நிலையை அறிந்து கொள்வதற்கான ‘வெசாட்’ என்ற செயற்கைக்கோளை வடிவமைத்திருந்தனர். அந்தவகையில் பெண்களின் மேற்பார்வையில் முழுமையாக வடிவமைக்கப்பட்ட நாட்டின் முதல் செயற்கைக்கோளுடன் மேலும் வெளிநாடுகளை சேர்ந்த 10 பேலோட்ஸ் (payloads) உடன் இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.

இதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்று காலை 8.10 மணிக்கு தொடங்கியது. மேலும், ராக்கெட் விண்ணில் செலுத்த அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் அவற்றின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே, இந்த எக்ஸ்போசாட் செயற்கைகோள்தான் 2024ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்படும் முதல் செயற்கைகோள் ஆகும்.

The post 2024ன் முதல் செயற்கைகோள் ‘எக்ஸ்போசாட்’டை சுமந்தபடி பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது: தூசு, கருந்துகள் வாயுக்களை ஆய்வு செய்யும், இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,South Pole of the Moon ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...