×

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அயோத்தியில் கொடிகட்டி பறக்கும் ரியல் எஸ்டேட்: நிலத்தின் விலை 20 மடங்கு அளவிற்கு உயர்வு

லக்னோ: அயோத்தியில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் ரியல் எஸ்டேட் துறை கொடிகட்டி பறக்கிறது. நிலத்தின் விலை 20 மடங்கு அளவிற்கு உயர்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆதரவாக கடந்த 2019ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்தவுடன், அயோத்தி நகரின் ரியல் எஸ்டேட் துறை வரலாறு காணாத உச்சத்தை எட்டி உள்ளது. இங்கு கட்டுமான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது. ஏனெனில், 2024ம் ஆண்டு இறுதிக்குள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 5 கோடியை எட்டக்கூடும் என்று கூறப்படுகிறது.

தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில், ராமர் கோயிலைச் சுற்றி மட்டுமின்றி அயோத்தியின் புறநகர்ப் பகுதிகளிலும் நிலத்தின் விலை கணிசமான அளவு உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறது. பைசாபாத் சாலைப் பகுதியில், 2019ம் ஆண்டில் சதுர அடிக்கு 400 – 700 ரூபாயாக இருந்த விகிதம் இந்தாண்டு அக்டோபரில் ஒரு சதுர அடிக்கு 1,500 – 4,000 ரூபாயாக அதிகரித்துள்ளது. அயோத்தியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சதுர அடி ரூ.1,000க்குக் கிடைத்த நிலம் இன்று சதுர அடி ரூ.12,000க்குக் கூடக் கிடைக்கவில்லை. மிகப்பெரிய பில்டிங் டெவலப்பர்களும், ஹோட்டல் நிறுவனங்களும் போட்டி போட்டு நிலங்களை வாங்கி வருகின்றன.

அயோத்தி மாவட்டத்தில் அபிநந்தன் லோதா ஹவுஸ் ஜனவரி மாதம் 25 ஏக்கர், குடியிருப்பு, அடுக்கு மேம்பாட்டு திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் புதிய ராமர் கோவிலில் இருந்து 15 நிமிட தூரத்தில் உள்ளது. தாஜ், ரேடிசன், ஓபராய் போன்ற பெரிய ஹோட்டல்களும் இப்பகுதியில் திறக்க முடிவு செய்துள்ளன. மேலும், தற்போது வெளிநாட்டு நிறுவனங்களும் அயோத்தியில் நிலம் வாங்க முகவர்களை நியமித்துள்ளன. அதனால் அயோத்தியில் நிலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கோயிலை சுற்றிலும் உள்ள நிலத்தின் விலை 20 மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சவுத்ரி கோசி பரிக்ரமா, ரிங் ரோடு மற்றும் லக்னோ – கோரக்பூர் நெடுஞ்சாலையில் நிலத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. ராமர் கோயில், சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் போன்ற பெரிய திட்டங்கள் சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருவதால், நிலத்தின் விலை மேலும் உயரும் என தொழில்துறை துறையினர் கூறுகின்றனர்.

The post சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் அயோத்தியில் கொடிகட்டி பறக்கும் ரியல் எஸ்டேட்: நிலத்தின் விலை 20 மடங்கு அளவிற்கு உயர்வு appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,LUCKNOW ,Supreme Court ,Ayodhya, Uttar Pradesh ,
× RELATED அயோத்தி கோயிலில் ஜனாதிபதி தரிசனம்