×

மாயமான மூதாட்டி கொலை: விஏஓவிடம் பெண் சரண்: பரபரப்பு வாக்குமூலம்

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மேற்கு காலனியை சேர்ந்தவர் சிவன் மனைவி மகேஸ்வரி(56). இவர் புத்தர் தெருவில் உள்ள அரசு பள்ளியில், காலை உணவு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். இது தவிர ஏலச்சீட்டு நடத்தி, அதில் வரும் பணத்தை கந்து வட்டிக்கும் கொடுத்து வந்தார். இவரை கடந்த நவம்பர் 20ம் தேதி முதல் காணவில்லை. இதுகுறித்து அவரது மகள் கவிதா அளித்த புகாரின் பேரில், குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், மகேஸ்வரியுடன் காலை உணவுத்திட்டத்தில் வேலை பார்த்து வந்த சக பெண் ஊழியர் கௌரிகாஞ்சனா(36) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று மாலை கௌரிகாஞ்சனா குமாரபாளையம் விஏஓ முருகனிடம், மகேஸ்வரியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார்.

இதையடுத்து அவர், குமாரபாளையம் போலீசில் கௌரிகாஞ்சனாவை ஒப்படைத்தார். அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். போலீசாரிடம் கௌரி காஞ்சனா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: காலை உணவுத்திட்டத்தில் மகேஸ்வரியும், நானும் வேலை செய்து வந்தோம். மகேஸ்வரியும் அவரது மகள் கவிதாவும் பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வந்தனர். நானும் அவர்களிடம் வட்டிக்கு பணம் வாங்கியதோடு, எனக்கு தெரிந்தவர்கள் பலருக்கும் பல லட்சம் கடன் வாங்கி கொடுத்தேன். இந்த பணத்தை நானே வசூல் செய்து மகேஸ்வரியிடம் திருப்பி கொடுத்து வந்தேன். நான் சிபாரிசு செய்தவர்களிடம் நானே வசூல் செய்தேன். ஆனால் அதை நான் செலவு செய்துவிட்டேன். பணத்தை மகேஸ்வரிக்கு என்னால் திருப்பி கொடுக்க முடியவில்லை. இந்த விஷயம் மகேஸ்வரிக்கு தெரிந்து விட்டதால், அவர் பணத்தை கேட்டு தொல்லைப்படுத்தினார். கடந்த மாதம் 20ம் தேதி, காலை உணவுத்திட்ட மையத்தில் வேலை முடிந்ததும் மகேஸ்வரி என்னிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, ஆத்திரமடைந்த நான் அவரை மாடிப்படியிலிருந்து தள்ளிவிட்டதில், படியில் உருண்டு விழுந்து மயக்கமானார். பின்னர், அவரது முகத்தை புடவையால் அழுத்தமாக மூடினேன். இதனால் அவர் மூச்சுத்திணறி இறந்தார். பின்னர் அவரது சடலத்தை அங்கேயே ஒதுக்குபுறமான இடத்தில் மறைத்து வைத்தேன். இரவு 9 மணியளவில், எனது 14 வயது மகளுடன் மொபட்டில் வந்தேன். இருவரும் சேர்ந்து மகேஸ்வரியின் சடலத்தை மொபட்டில் முன்புறம் அமர வைத்து, பவானி காளிங்கராயன் கால்வாய்க்கு எடுத்துச்சென்றோம். அங்கு மகேஸ்வரியின் சடலத்தை கால்வாயில் தள்ளி விட்டு வந்து விட்டேன். அதன் பின்னர் போலீசார் சந்தேகப்பட்டு என்னை திரும்ப திரும்ப விசாரித்தனர். இதனால், கிராம நிர்வாக அலுவலரிடம் சரணடைந்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, காளிங்கராயன் கால்வாய் பகுதியில் முகாமிட்டு, மகேஸ்வரியின் சடலத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

அடகு கடையில் தாலி: மகேஸ்வரியை கொலை செய்த கெளரிகாஞ்சனா, அவரது கழுத்தில் இருந்த தங்க தாலியை கழற்றியுள்ளார். இந்த தாலியில் இருந்த 42 நாணல்களையும் பிரித்து, உள்ளூரில் உள்ள ஒரு அடகு கடையில் வைத்து, ₹42 ஆயிரம் பெற்றுள்ளார். அடகு கடையிலிருந்த தாலியை போலீசார் மீட்டனர்.

The post மாயமான மூதாட்டி கொலை: விஏஓவிடம் பெண் சரண்: பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Namakkal ,Shivan ,Maheshwari ,Kumarapalayam West Colony, ,Namakkal district ,Buddha Street ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...