×

ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 131 பேர் கைது

 

சேலம், டிச.31: சேலம் மாநகர் மற்றும் மாவட்ட பகுதியில் ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து, தொடர்ந்து ஓராண்டு சிறையில் அடைத்து வருகின்றனர். குற்றச் செயல்களை தடுக்க ஏ பிளஸ், ஏ, பி பிரிவு ரவுடிகள் மீது இத்தகைய நடவடிக்கையை அந்தந்த மாவட்டங்களில் எஸ்பிக்கள் பரிந்துரையில் மாவட்ட கலெக்டர்களும், மாநகர பகுதியில் போலீஸ் கமிஷனர்களும் எடுத்து வருகின்றனர்.

இந்தவகையில் சேலம் மாவட்டத்தை பொருத்தளவில் கடந்த ஓராண்டில் (2023) 7 ரவுடிகளை குண்டர் தடுப்பு காவலில் போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். சேலம் மாநகர பகுதியில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை போலீஸ் அதிகாரிகள் அதிகளவு பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மாநகரில் 125 பேர் குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், கொலை, வழிப்பறி, அடிதடி போன்ற செயல்களில் ஈடுபட்ட 59 ரவுடிகளும், வீடு புகுந்து கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட 36 கொள்ளையர்களும், கஞ்சா விற்க 13 பேரும், பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 8 பேரும், தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 3 பேரும், விபசார தொழிலில் ஈடுபட்ட 3 பேரும், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட 3 பேரும் என 125 பேரை குண்டர் தடுப்பு காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேலம் மாநகர், மாவட்ட பகுதியில் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள் மற்றும் பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் செயல்படும் நபர்களை குண்டாசில் சிறை வைத்து வருகிறோம். இந்த 2023ம் ஆண்டில் சேலம் மாநகரில் மிக அதிகபடியாக 125 பேரை சிறையில் அடைத்துள்ளோம். கொலை, கொள்ளையில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து அவர்கள் மீது இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் குற்றச் செயல்களை தடுக்க முடிகிறது,’’ என்றனர்.

The post ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 131 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Dinakaran ,
× RELATED போதைக்காக வலி நிவாரண மாத்திரைகள் பதுக்கி விற்பனை