×

சென்னையில் உள்ள பல கோயில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: நாளை அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு

சென்னை: ஆங்கில புத்தாண்டையொட்டி சென்னையில் உள்ள கோயில்களில் நாளை பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல கோயில்களில் நாளை (1ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் புத்தாண்டையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசனம் செய்ய தடுப்புகள் அமைக்கப்பட்டு வரிசையாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் புத்தாண்டு தரிசனத்துக்காக அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சிறப்பு அபிஷேகத்துக்கு பிறகு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் உள்ள திருப்பதி திருமலை தேவஸ்தான பெருமாள் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வடபழனி முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் சாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முருக பெருமான் தங்க நாணய அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளிக்க உள்ளார். தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம், பகல் 12 மணிக்கு தங்க கவச அலங்காரமும், மாலையில் ராஜ அலங்காரமும் நடக்கிறது.

புத்தாண்டை முன்னிட்டு இரவு 9 மணிக்கு கோயில் நடை மூடப்படாது என்றும் இரவிலும் பக்தர்கள் உள்ள வரை சாமி தரிசனம் செய்து செல்லலாம் என்றும் கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே சிறப்பு தரிசன டிக்கெட் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பூங்காநகர் ராசப்பா தெருவில் கந்தகோட்டம் முருகன் கோயில் தொடங்கப்பட்ட நாள் டிசம்பர் 31ம் தேதியை முன்னிட்டு இன்று மாலை 6 மணிக்கு 108 சங்காபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து தங்க மயில் வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெறும்.

திருவொற்றியூர் தேரடி வடிவுடையம்மன் கோயிலில் நாளை அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் தொடர்ந்து நடைபெறும். மாலை 5 மணிக்கு அபிஷேகம், 6.30 மணிக்கு மீண்டும் நடைதிறக்கப்பட்டு இரவு 10 மணி வரை சாமி தரிசனம் நடைபெறும். தி.நகர் பத்மாவதி தாயார் சன்னிதானத்தில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சாமிக்கு விசேஷ அலங்காரங்கள், தீபதூப ஆராதனைகள் நடக்கிறது. பின்னர் தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் திருமுல்லைவாயலில் உள்ள பச்சையம்மன் மன்னாதி ஈஸ்வரர் ஆலயத்தில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு பிரம்ம முகூர்த்த நேரமான 4.30 மணி முதல் 6 மணிக்குள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து பூப்பந்தல் அமைத்து சாத்துப்படி அலங்காரம் உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

குரு தலமான பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவல்லீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் இன்று இரவு முதல் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையின் பிற பகுதிகளி லிருந்து திருவேற்காடு வந்து செல்ல மாநகர பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக சிறப்பு வரிசை ஏற்படுத்தப்படுகிறது. நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோபூஜை, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

நள்ளிரவு 1 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். 1ம் தேதி இரவு 10 மணி வரை தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களுக்கு வழங்குவதற்காக 25 ஆயிரம் லட்டுகளும் தயார் செய்யப்படுகிறது. குன்றத்தூர் முருகன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜையுடன் ஜோதி தரிசனம் நடக்கிறது.

The post சென்னையில் உள்ள பல கோயில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு: நாளை அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு appeared first on Dinakaran.

Tags : English New Year ,Chennai ,Chennai Tiruvallikeni Parthasarathy Temple ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!