×

அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கோயில் அகற்றம்: ஆர்டிஓ தலைமையில் அதிரடி, பாஜவினர் சாலை மறியல்

 

திருவள்ளூர்: திருத்தணி நகரம் ஜெ.ஜெ.ரவி நகர் பகுதியில் அரசுக்கு சொந்தமான பாறை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் நான்கரை ஏக்கர் பரப்பில் சில தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடு கட்டுவதற்கு அடித்தளம் மற்றும் சுற்றுசுவர் கட்டி வந்தனர். மேலும் புதிதாக சாய்பாபா கோவில் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மற்றும் திருத்தணி ஆர்டிஓவிடம் புகார் தெரிவித்து வந்தனர்.

இதையடுத்து திருத்தணி ஆர்டிஓ தீபா, டிஎஸ்பி விக்னேஷ் தலைமையில் தாசில்தார் மதன், வருவாய் ஆய்வாளர் கமல், கிராம நிர்வாக அலுவலர் புகழேந்தி மற்றும் வருவாய் துறை ஊழியர்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஜேசிபி இயந்திரத்துடன் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கோயில் ஆக்கிரமிப்பை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் 30க்கும் மேற்பட்டோர் வருவாய்த் துறை மற்றும் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

தொடர்ந்து பாஜ திருத்தணி நகர தலைவர் சூரி தலைமையில் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து திருத்தணி அரக்கோணம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை குண்டு கட்டாக தூக்கி கைது செய்ய முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் ஆக்கிரமிப்பாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து முறைப்படி ஆர்டிஓ அலுவலகத்தில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததால் சாலை மறியலை கை விட்டு கலைந்து சென்றனர்.

The post அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் வீடு, கோயில் அகற்றம்: ஆர்டிஓ தலைமையில் அதிரடி, பாஜவினர் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : RTO ,BJP ,Tiruvallur ,J.J. Ravi Nagar ,Tiruthani ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...