×

உச்ச நீதிமன்ற அறிவிப்பு எதிரொலியால் அழைப்பு ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: மாஜி அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய அனுமதி அளிக்கவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவும் வலியுறுத்தல்

சென்னை: உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலினால், தமிழ்நாடு ஆளுநர் அழைப்பின்பேரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அவரை சந்தித்துப் பேசினார். அப்போது, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதிமுக முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில், ஆளுநர் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதல்வரோடு ஆலோசனை நடத்த வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது.

அதன் அடிப்படையில், ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அந்தவகையில் ஆளுநரின் அழைப்பை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, முதல்வரின் செயலாளர் முருகானந்தம் ஆகியோருடன் சென்று நேற்று ஆளுநரை சந்தித்தார். அப்போது, பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதை திரும்பப் பெற்று, அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநரை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

இதுமட்டுமின்றி, ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கும் விரைந்து ஒப்புதல் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டினார். மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பு நீண்ட காலமாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பி வைக்க முதல்வர் கேட்டுக்கொண்டார்.

பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநரின் செயல்பாடு அமையும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். அதனடிப்படையில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் நேரிலும், எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்க வேண்டுமெனவும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமெனவும் முதல்வர் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது அரசின் கோரிக்கையை முதல்வர் கடிதமாக ஆளுநரிடம் வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின்மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பிற்கு பின் நிருபர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தின் அறிவுத்தலின்படி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அழைப்பை ஏற்று அவரது மாளிகையில் முதல்வருடன் சென்று சந்தித்தோம். அதன்படி, 21 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 10 மசோதாவினை ‘I With Hold Assent’ என கூறி திருப்பி அனுப்பினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி இரண்டாவது முறையாக ஆளுநருக்கு மீண்டும் மசோதாக்கள் அனுப்பப்பட்டன.

இதில் உயர்கல்வி தொடர்பான மசோதாக்கள் உள்பட 20 மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு அனுப்பிவிட்டதாக ஆளுநர் தரப்பில் கூறினர். ஒரே ஒரு மசோதாவான வேளாண் விளைபொருள் சட்டமுன்வடிவு மட்டுமே ஆளுநரிடம் தற்போது உள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டோம். கே.சி.வீரமணி மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 15 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையிலுள்ளது. சி.விஜயபாஸ்கர் மீது ஊழல் வழக்கு தொடர அனுமதி கோரப்பட்ட கோப்பு 7 மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. அவற்றிற்கு அனுமதி தர வேண்டும் என கேட்டுக்கொண்டாம்.

மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாவின் 115வது பிறந்தநாளையொட்டி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டி விடுதலை என்ற அடிப்படையில் 119 கோப்புகள் முதற்கட்டமாக அனுப்பப்பட்டன. அதில் 70 கோப்புகளில் 68 பேரின் விடுதலைக்கு அனுமதி தந்து 2 பேரின் விடுதலை மட்டும் ரத்து என எங்களுக்கு அந்த கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள 49 சட்டமுன்வடிவு கோப்புகள் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளன. நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, அந்த கோப்புகளை ஆளுநர் பரிசீலித்து ஒப்புதல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம். டி.என்.பி.எஸ்.சியில் 11 உறுப்பினர்கள் இருக்க வேண்டிய இடத்தில் நீண்ட காலமாக 4 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, அதற்கான விளக்கங்களையும் ஆளுநரிடம் எடுத்துரைத்து, ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். அதன்படி, இவற்றை எல்லாம் மனுவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறியதாவது: ஆளுநர் அனுப்பிய உயர்கல்வி தொடர்பான மசோதாவை சிறப்பு சட்டமன்றம் கூட்டி நிறைவேற்றப்பட்ட பின்னர் அதற்கான முடிவுகளை எடுக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது. குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டிய அவசியமில்லை. 1950 ஆண்டு அரசியலமைப்பு சட்டம் வந்தது. அதன்படி, அதற்கு முந்தையை மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பலாம். ஆனால், இவை அப்படி இல்லை. இதுபோல அனுப்பினால் அந்த மசோதாக்கள் சட்டமாக மாற காலதாமதம் ஏற்படும்.

ஆளுநரிடம் அனுப்பப்பட்ட மசோதாக்கள் உயர்கல்வித்துறை, சட்டத்துறை, வேளாண்துறை மற்றும் நிதித்துறை சார்ந்தவை உள்ளன. நாங்கள் கேட்பது உங்களுக்கு (ஆளுநர்) பவர் இருக்கும் போது குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டியது இல்லை என்பதுதான். இவ்வாறு அவர் கூறினார். ஊழல் வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன.

* முதல்வருடன் சந்திப்பு சுமுகமாக இருந்தது அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு அரசுக்கு ஆதரவு: ஆளுநர் மாளிகை அறிக்கை
கிண்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை: மாநில அரசு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஆளுநர் ஆர்.என்.ரவி அழைத்திருந்தார். அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநரை ராஜ் பவனில் நேற்று மாலை 5.30 மணியளவில் சந்தித்தார். முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் மற்றும் பொதுத்துறை செயலாளர் இருந்தனர். இந்த சந்திப்பு சுமுகமாக இருந்தது. ஆளுநரும், முதல்வரும் பரஸ்பரம் மரியாதையை பரிமாறிக்கொண்டு, மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து கருத்துகளை பகிர்ந்துகொண்டனர். தமிழ்நாட்டு மக்களின் நலனில் முழு ஈடுபாட்டைக் கொண்டிருப்பதாக ஆளுநர் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்பின் வரம்புக்கு உட்பட்டு மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு முதல்வருடன் அவ்வப்போது சந்திப்புகள் நடைபெற வேண்டிய அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post உச்ச நீதிமன்ற அறிவிப்பு எதிரொலியால் அழைப்பு ஆளுநருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு: மாஜி அமைச்சர்கள் மீது வழக்குப் பதிய அனுமதி அளிக்கவும், நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவும் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CM ,M.K.Stalin ,Governor ,Supreme Court ,CHENNAI ,Chief Minister ,M. K. Stalin ,Governor of Tamil Nadu ,AIADMK ,MR Vijayabaskar ,KC Veeramani ,M K Stalin ,Dinakaran ,
× RELATED வெப்ப அலை வீசும் என வானிலை எச்சரிக்கை...