கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சேர்ந்த தொழிலதிபர் கிளமெண்ட், சிப்காட் தொழிற்பேட்டையில் பாரத் ஆக்சிஜன் நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் இவர் தனிப்பட்ட முறையிலும் அரிமா சங்கத்தின் மூலமும் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதியில் பல்வேறு நற்பணிகளை செய்து வருகிறார். கடந்த நான்கு வருடங்களாக தொழிலதிபர் கிளமெண்ட் கும்மிடிப்பூண்டி வட்டாரத்தில் உள்ள வீடற்ற ஏழை எளியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வீடு கட்டித் தந்து சேவை புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் சார்பில் 40வது வீடு பாத்தபாளையத்தைச் சார்ந்த முத்து -அன்னபூர்ணா தம்பதிருக்கு கட்டித் தரப்பட்டது. தார்பாயால் ஆன வீட்டில் கடந்த 15 வருடமாக தங்கி துன்புற்று வரும் இவர்கள் மழைக் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து அறிந்த தொழிலதிபர் கிளமெண்ட் இவர்களுக்கு புதிய வீட்டை கட்டித் தந்து தம்பதியரை மகிழவைத்தார்.
இந்த வீட்டின் திறப்பு விழா கிளமெண்ட்- சிந்து கிளமெண்ட் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.பி வேணுகோபால், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், விஜய் சூப்பர் சிங்கர் ஜூனியர் இறுதிப் போட்டியாளர் ரிச்சா ஆகியோர் பங்கேற்று குத்துவிளக்கேற்றி தொழிலதிபர் கிளமெண்ட் முன்னிலையில் பயனாளியிடம் வீட்டை ஒப்படைத்தனர். மேலும் முத்து- அன்னபூர்ணா தம்பதியருக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களையும் தொழிலதிபர் கிளமெண்ட் வழங்கினார்.
The post ஏழை குடும்பத்துக்கு இலவச வீடு: கும்மிடிப்பூண்டி தொழிலதிபர் வழங்கினார் appeared first on Dinakaran.