×

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பு: கோயில் நிர்வாகம் தகவல்

பூந்தமல்லி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1ம் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், இவ்வாண்டும் 1.01.2024 நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பக்தர்கள் அனைவருக்கும் நாள் முழுவதும் பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி மற்றும் வருகை தரும் பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்குதல் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருவேற்காடு நகராட்சி மற்றும் இதர துறை அலுவலர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் சந்தனக் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலின் உப கோயிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான அருள்மிகு பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோயிலிலும், 1.01.2024 நள்ளிரவு 12.00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன், இறைவி அருள் பாலிப்பர்.

பக்தர்கள் அனைவரும் புத்தாண்டு தினத்தில் கோயிலுக்கு வருகை புரிந்து, அம்மனின் பேரருளை பெற்றுய்யுமாறு கோயிலின் இணை ஆணையர்/ செயல் அலுவலர் அருணாசலம் மற்றும் கோயிலின் அறங்காவலர் குழுத்தலைவர் மூர்த்தி, அறங்காவலர்கள் சந்திரசேகரசெட்டி, கோவிந்தசாமி, வளர்மதி மற்றும் சாந்தகுமார் ஆகியோர் பக்தர்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயிலில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பு: கோயில் நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tiruvekadu ,Devi Karumariyamman Temple ,English New Year ,Poontamalli ,Tiruvekadu Devi Karumariamman ,Tiruvekadu Devi ,Karumariamman ,
× RELATED திருவேற்காடு கூவம் கரையோர வீடுகளை...