×
Saravana Stores

திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை


திருப்போரூர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலை உருவாக்கிய சிதம்பர சிவஞான சுவாமிகள் தனக்கென ஒரு மடத்தை கண்ணகப்பட்டு கிராமத்தில் உருவாக்கினார். இந்த மடத்தில் தங்கி தினசரி பக்தர்களை சந்தித்து அருளாசி வழங்கி வந்தார். அந்த இடத்திலேயே அவரது ஜீவ சமாதி அமைந்துள்ளதால். மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும், ஆண்டுதோறும் சிதம்பர சுவாமிகளின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா போன்றவையும் வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. இதுமட்டுமின்றி, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலின் முதல் ஆதீனமான சிதம்பர சுவாமிகளை தொடர்ந்து வந்த 13 ஆதீனங்களின் சமாதியும் இந்த மடத்தில்தான் அமைந்துள்ளது. இதன் காரணமாக, திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிதம்பர சுவாமிகளின் மடத்திற்கும் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த மடத்தில் சிதம்பர சுவாமிகள் 300 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்திய புலித்தோல், கமண்டலம், பாதரட்சை போன்ற பொருட்களும், அவர் தங்கி தியானம் செய்த ஒடுக்க அறையும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நீண்ட காலமாக இம்மடத்தின் சில பகுதிகள் சிறிது சிறிதாக சேதமடைந்து வந்தது. இதைத்தொடர்ந்து மடத்தின் கட்டிடத்தை முழுவதுமாக மாற்றி அமைக்க வேண்டுமென்று 14வது ஆதீனமாக இருந்த சிதம்பர சிவஞான சுவாமிகள் வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, சில உபயதாரர்கள் நிதியுதவி செய்ய முன்வந்தனர். அதற்குள் சிதம்பர சிவஞான சுவாமிகள் மரணம் அடைந்து விட்டார். பின்னர், 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மடத்தின் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.

ஆனால் போதிய நிதி ஆதாரம் இல்லாததாலும், உபயதாரர்கள் தங்களது உதவியை நிறுத்தியதாலும் திருப்பணி முற்றிலுமாக நின்று விட்டது. 10 ஆண்டுகளை கடந்தும் இன்னும் மடத்தின் பிரதான கட்டிடம், தியான மண்டபம், அன்னதானக்கூடம் ஆகிய பணிகள் முழுமையடையாமல் உள்ளன. ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை நிதியின் கீழ் இப்பணிகளை முடிக்க முடிவு செய்யப்பட்டு அவ்வப்போது திட்ட அறிக்கையும் மதிப்பீடும் தயாரிக்கப்பட்டது.

ஆனால், தொடர்ச்சியான காலதாமதம், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு, கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால் மடத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் தொடரப்படாத நிலை உள்ளது. ஆகவே, இந்து சமய அறநிலையத்துறை திருப்போரூர் கந்தசுவாமி கோயில் உருவாக காரணமாக இருந்த சிதம்பர சுவாமிகளின் மடத்தை அறநிலையத்துறை நிதியிலிருந்து நிதி ஒதுக்கி மீதமுள்ள கட்டுமான பணிகளை முடித்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

The post திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் மடத்தின் திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruporur Chidambara ,Swami ,Tiruporur ,Chidambara Swami ,Chidambara Sivajnana Swami ,Tiruporur Kandaswamy Temple ,Kannagapattu village ,
× RELATED ‘திருச்செந்தூரில் சுவாமி தரிசனத்துக்கு ரூ.2,000 கட்டணமா?’