×

படப்பை – வாலாஜாபாத் இடையே சாலை தடுப்புகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி

ஸ்ரீபெரும்புதூர்: படப்பை – வாலாஜாபாத் இடையே வைக்கப்பட்டுள்ள சாலை தடுப்புகளால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காஞ்சிபுரம் பாலாற்றில் இருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், 50 கிலோ மீட்டருக்கு ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு, பல ஆயிரம் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. இந்த, ராட்சத குடிநீர் குழாய்கள் முறையாக பராமரிக்கப்படாததால், ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு, தண்ணீர் வீணடிக்கப்படுகிறது.

இந்நிலையில், தாம்பரம் அருகே படப்பை பகுதியில் வண்டலூர் – வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், அண்மையில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, அதிகாரிகள் சாலையின் நடுவே பள்ளம் தோண்டி குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்துள்ளனர். பின்னர், மண்ணைக் கொண்டு மூடிவிட்டு தோண்டப்பட்ட பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர்.

இதனால், படப்பையில் இருந்து வாலாஜாபாத் மார்க்கமாக செல்லும் வாகன ஓட்டிகள், நெடுஞ்சாலையின் நடுவே அமைக்கபட்டுள்ள இரும்பு தடுப்புகளில் மோதி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று ஆரம்பாக்கம், ஒரத்தூர் கிராமங்களைச் சேர்ந்த மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பலதரப்பு மக்களும் சாலையை கடந்து செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, உயிர்ச் சேதம் ஏற்படும் வகையில் உள்ள சாலையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post படப்பை – வாலாஜாபாத் இடையே சாலை தடுப்புகளால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Patappai ,Walajabad ,Sriperumbudur ,Kanchipuram Palar ,Tambaram Corporation ,
× RELATED வாலாஜாபாத் பேரூராட்சியில் மினி...