×

இந்திய நாட்டிய விழாவை காண மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்: இந்திய நாட்டிய விழா முடியும் வரை மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் ஒன்றிய மற்றும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் வெளிநாட்டு பயணிகளை கவரும் வகையில் ஒரு மாதம் நாட்டிய விழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில், ஒடிசி கதகளி, பொய்க்கால் குதிரை, குச்சிப் புடி, மோகினி ஆட்டம், கரகாட்டம், காவடி ஆட்டம், பரத நாட்டியம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான இந்திய நாட்டிய விழா கடந்த 22ம் தேதி தொடங்கியது. வரும் ஜனவரி 21ம் தேதி வரை 31 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்திய நாட்டிய விழாவை காண மாமல்லபுரத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் கார், வேன் மற்றும் அரசு பேருந்துகளில் வருகின்றனர்.

அரசு பேருந்துகளில் வரும் பயணிகள் நாட்டிய விழாவை பார்த்துவிட்டு வீடு திரும்பிச் செல்ல போதிய பேருந்துகள் இல்லாததால் வெகுநேரம் பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இந்திய நாட்டிய விழா முடியும் வரை மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post இந்திய நாட்டிய விழாவை காண மாமல்லபுரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,dance festival ,Indian dance festival ,Union ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன்...