×

மதுராந்தகம் நகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களுக்கு கருத்தடை

மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளிலும் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, ஒவ்வொரு தெருக்களிலும் 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன. மேலும் தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சண்டையிடுகின்றன.

இங்குள்ள அரசினர் மருத்துவமனை வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட நாய்களும், அம்மா உணவகம், அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாய்களும் முகாமிட்டு அங்கு வந்து செல்வோரை குரைத்தும், துரத்தும் செயல்களிலும் ஈடுபட்டு வந்தன. இதனால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்துடன் சென்று வந்தனர். எனவே மதுராந்தகம் நகரம் முழுவதும் நாயின் இனப்பெருக்கம் அதிகரித்து காணப்பட்டதால் நாய்களைப் பிடிக்க வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் கடந்த 4 தினங்களாக நகரமன்ற தலைவர் மலர்விழி குமார், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) விஜயகுமார், சுகாதார அலுவலர் சீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் நகராட்சி நிர்வாகம் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்களை பிடிக்க பிரத்யோகமாக வடிவமைக்கப்பட்ட மினி கூண்டு லாரியில் பிடித்துச் சென்று கால்நடை மருத்துவர் மூலமாக கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர். மேலும் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை செய்தனர்.

நோய்வாய்ப்பட்ட நாய்களையும் பிடிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து நாய் பிடிக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம் பாதுகாப்பான முறையிலும், அரசின் வழிகாட்டுதல் முறையிலும் செய்து வருகிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால் நகராட்சி நிர்வாகத்தை அணுகலாம் என பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

The post மதுராந்தகம் நகராட்சியில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்களுக்கு கருத்தடை appeared first on Dinakaran.

Tags : Madhurandagam Municipality ,Madhurandakam ,Maduraandakam ,Madurandakam ,Chengalpattu district ,
× RELATED காவல் நிலையம் அருகே நிறுத்தப்பட்ட பறிமுதல் வாகனங்கள் அகற்றம்