×

2 மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்

சென்னை: தமிழகத்தில் கடந்த 2 மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.வடகிழக்கு பருவமழையையொட்டி சென்னை, தரமணி, தந்தை பெரியார் நகரில் உள்ள 178 மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்த 10வது வார மழைக்கால சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். இதில், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், அசன் மௌலானா எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடத்த திட்டமிட்டு கடந்த 9 வாரங்களில் 23,315 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இன்று 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் நடந்து வருகிறது. டெங்கு, மலேரியா, வயிற்றுப்போக்கு போன்றவற்றில் இருந்து மக்களை பாதுகாக்க இந்த முகாம்கள் பயன்பட்டுள்ளது. மிக்ஜாம் புயலுக்காக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கும் மேல் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

இதுவரை 13,482 மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. அதேபோல தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கடந்த 17ம் தேதி முதல் இன்று வரை 6,635 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை தமிழகத்தில் 2 மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 21,79,991 பொதுமக்கள் பயன்பெற்றுள்ளனர். கனமழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 2,516 முகாம்கள் நடத்தபட்டுள்ளன. இன்றும் முகாம் நடந்து வருகிறது.

கொரோனா ஜே.என் 1.1. என்ற புதிய கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. சென்னையில் கொரோனா கிளஸ்டர் இல்லை. இந்த புதிய வகை கொரோனாவால் பாதித்தவர்கள் 3 அல்லது 4 நாட்கள் ஓய்வு எடுத்தால் குணமடைந்து விடும். இணைநோய்கள் உள்ளவர்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோர் பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். புதிய உருமாற்றத்தால் பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு பெரிய பாதிப்பில்லை.

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு படுக்கை வசதிகள் 1.25 லட்சத்தை கடந்த அளவில் உள்ளது. 2 ஆயிரம் மெட்ரிக் டன் மேற்பட்ட ஆக்சிஜன் வசதிகள் உள்ளது. தமிழகத்தில் டெங்கு பாதிப்புகள் கட்டுக்குள் உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்தாண்டு டெங்கு பாதிப்பும் உயிரிழப்பும் குறைவாக உள்ளது. டெங்கு குறித்து அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை 8,953 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு பாதிப்பு ஆண்டு சராசரியாக உள்ள 10 ஆயிரத்தைவிட குறைவாகவே உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

The post 2 மாதங்களில் 43,432 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. ,Subramanian Pride ,Chennai ,Tamil Nadu ,Minister MLA ,Subramanian ,Rainfall Special Medical ,Thanthai Periyar Nagar, Tharamani, Chennai ,Ma. Subramanian ,Pride ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...