×

திருப்பதியில் மீண்டும் பரவியது: மூதாட்டி உட்பட 4 பேருக்கு கொரோனா

திருமலை:ஆந்திர மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் தொடங்கியுள்ளது. கொரோனாவை கண்டறிய திருப்பதி மாவட்டத்தில் உள்ள ரூயா அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் பரிசோதனை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூயா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்டோருக்கு ரேபிட் டெஸ்ட் செய்யப்பட்டது. இதில் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. அவர்களில் 3 பேர் திருப்பதியை சேர்ந்தவர்கள். ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்த பெங்களூருவை சேர்ந்த 70 வயது மூதாட்டியாகும்.

இவர்களில் ஒருவர் 2 நாட்களாக அரசு ரூயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 2 பேர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டனர். பெங்களூரை சேர்ந்த மூதாட்டியும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனை முதல்வர் ஹரி, கண்காணிப்பாளர் ரவிபிரபு ஆகியோர் நேற்று மருத்துவமனையின் கோவிட் பரிசோதனை மையம், தனிமைப்படுத்தல் மையம் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை ஆய்வு செய்தனர். பின்னர் அவர்கள் நிருபர்களுக்கு அளித்த பேட்டி : கொரோனா பரிசோதனையில், ‘பாசிட்டிவ்’ என வருபவர்கள் கோவிட் சந்தேக நபர்களாக மட்டுமே கருதப்படுவார்கள்.

ஆர்டிபிசிஆர் சோதனையில் பாசிட்டிவ் வந்தால் மட்டுமே அவர்கள் கொரோனா நோயாளிகளாக உறுதி செய்யப்படுவார்கள். இருப்பினும், அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்படும். மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சானிடைசர்களை பயன்படுத்துவது மற்றும் முடிந்தவரை கோவிட் விதிமுறைகளை பின்பற்றுவது அனைவருக்கும் பாதுகாப்பானது என்றார்.

The post திருப்பதியில் மீண்டும் பரவியது: மூதாட்டி உட்பட 4 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : AP ,Ruya Government Hospital ,Primary Health Hospitals ,Tirupati ,Ruya Hospital ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...