×

என்ன சொல்லுது உங்கள் ராசி: ரிஷப ராசிக்காரர்களின் நோயும் தீர்வும்

முனைவர் செ.ராஜேஸ்வரி

ரிஷபராசி சுக்கிரனுடைய ராசி என்பதால், அழகும் கவர்ச்சியும் அமைதியும் மன உறுதியும் பெற்ற இவர்களிடம் நோய்கள் மிகவும் பிரியமாக வந்து ஒட்டிக்கொள்ளும். இவர்களைப் பார்த்தால் நோய்வாய்ப்பட்டு இருப்பதாகவே தெரியாது. நோயாளிகள்கூட தங்களை அழகாகவும் சுத்தமாகவும் கவர்ச்சியாகவும் வைத்துக் கொள்வர். அழகாக உடுத்திக் கொள்வர். அலங்கரித்துக் கொள்வர்.

ரிஷபராசிக்காரருக்கு கபம் சம்பந்தப்பட்ட நோய்கள் தாக்குவது எளிது. ஜலதோஷம், இருமல், சளி, மூக்கில் சதை வளர்தல் தொண்டையில் சதை வளர்தல், மம்ஸ் எனப்படும் பொன்னுக்கு வீங்கி என்ற அம்மை நோய் போன்றவை எளிதில் தாக்கும். கழுத்து சுளுக்கிக் கொள்வது, பிடரியில் வலி, தொண்டையில் கட்டி போன்ற பாதிப்புகள் ரிஷப ராசிக்காரர்களுக்கு மற்ற ராசிகாரர்களைவிட அதிகம் வரும்.

வலி இருக்கு ஆனால் இல்லை

ரிஷப ராசிக்காரருக்கு முதுகு வலி, தலைவலி, பின்னங்கழுத்து வலி ஆகியவை இருந்தாலும், நேரில் பார்ப்பதற்கு வெகு உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பிறருடைய அனுதாபத்தை எதிர்பார்த்து யாரிடமும் அங்கு வலிக்கிறது இங்கு வலிக்கிறது என்று புலம்பமாட்டார்கள். வெளியே யாருக்கும் தெரியாமல் மருந்து சாப்பிட்டு தங்கள் நோயை குணமாக்குவர்.

மன உளைச்சல்

ஆணுக்குரிய அதிகாரமும் அழுத்தமும் வீரியமும் கொண்ட இவர்களுக்கு, நினைவாற்றல் மிகுதி. இவர்களை சைலண்ட் கில்லர்ஸ் எனலாம். அமைதி கொலையாளிகள் என்று சொல்லும் அளவிற்கு அதிருப்தி, கோபம், பகை போன்றவற்றைத் தன் மனதுக்குள் வைத்திருந்து நேரம் பார்த்து எதிரியைப் பழி வாங்கிவிடுவர். இதற்கான வன்மம் இவர்கள் மனதில் இருக்கும். அது சிலருக்கு மன உளைச்சலை தரும்.

மருத்துவர் யார்

அலோபதி மருத்துவத்தை ரிஷப ராசி பெண்ணும், ஆணும் நாடுவதில்லை. குறிப்பாக, இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வது பிடிக்கவே பிடிக்காது. டோக்கன் போட்டு காத்து கிடப்பதும் அறவே பிடிக்காது. சொகுசான வாழ்க்கையை விரும்பும் இவர்கள் வைத்தியத்திலும், அதே சொகுசை எதிர்பார்ப்பார்கள். ஆயுர்வேதம் மற்றும் ஹோமியோபதி மருத்துவர்களை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் மருத்துவரைப் பார்க்க உள்ளே செல்வதும் வெளியே வருவதும் யாருக்கும் தெரியாது.

ரகசிய நோய்கள்

பெண்களுக்குக் குறிப்பாக கர்ப்பப்பையில் கட்டி, பெண்ணுறுப்பில் தொற்று, வெள்ளைபடுதல், கால் இடுக்கு – கை இடுக்கில் அரிப்பு போன்ற வெளியே தெரியாத நோய்கள் வரும். இவர்களே வீட்டு வைத்தியம் செய்து இவற்றை சரி செய்து கொள்ள முயற்சி செய்வார்கள். இவர்களுக்கு (யூரினரி இன்ஃபெக்ஷன்) சிறுநீர்த் தொற்று இருப்பது தெரியாது. இவர்களுக்கு பெரும்பாலும் அறுவைசிகிச்சைகள் தேவைப்படுவதில்லை.

வாதம், பித்தம் சிலேத்துமம் என்ற மூன்றில் சிலேத்துமம் எனப்படும் குளிர்ச்சி தொடர்பான வியாதிகள் அதிகம் தோன்றும். மர்ம உறுப்பு சார்ந்த வியாதிகள் வருவதற்கும் வாய்ப்பு உண்டு. பெண்களில் ஒரு சிலருக்குப் பால்வினை நோய்கள் வரக்கூடும். ஆனால் பயப்பட தேவையில்லை, ஜாதகத்தில் பாதகமான அமைப்புகள் இருந்தால் மட்டுமே இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு.

பிளாஸ்திரி, கட்டுப்போடக் கூடாது

பொதுவாக, ரிஷப ராசிக்காரர்கள் ஆரோக்கியமானவர், கம்பீரமானவர், அமைதியானவர், சொகுசானவர். அனைத்து உணவுகளையும் ரசித்து ருசித்து சாப்பிடும் சுவைஞர். உறுத்தாத இதமான துணிகளை உடுத்துவதில் விருப்பம் உள்ளவர். இவருக்கு ஒரு சின்ன பிளாஸ்திரி ஓட்டுவதில் அல்லது கட்டுப் போடுவதில் விருப்பம் இருக்காது. கட்டு போடாமல் பிளாஸ்திரி ஒட்டாமல் இருப்பர். வெளியே எங்கும் போகாமல் தூசி, புகை, மண் படாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து அந்த காயம் சுகமாகும் வரை பிளாஸ்திரியோ கட்டோ போடாமல் சமாளித்து விடுவார்கள்.

உடல் பருமன்

பெரும்பாலும், ரிஷப ராசிக்காரர்கள் சற்று உடல் பருமன் உடையவர்களாக இருப்பர். ஏனெனில் இவர்கள் உடல் உழைப்பை விரும்புவது கிடையாது. உடல் பருமன் சம்பந்தப்பட்ட தொடர்பான நோய்கள் இவர்களுக்கு வர வாய்ப்புண்டு. கிரியாட்டினின் அளவு உயர்வு, ரத்தச் சர்க்கரை உயர்வு, போன்ற வெளியே தெரியாத நோய்கள் இவர்களுக்குள் இருந்து கொண்டிருக்கும்.

வீட்டு வைத்தியம்

மழைக்காலங்களிலும் பனிக்காலங்களிலும் சளி தொந்தரவால் அவதிப்படும் இவர்கள், அதிகமாக வெளியே செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து ஆவி பிடித்தல், தைலம் தடவுதல் போன்ற எளிய மருத்துவ முறைகளைக் கொண்டு சுகமாக்குவர். தங்களின் பிரச்னை தீரும் வரை அமைதியாக வீட்டுக்குள்ளேயே இருப்பார்கள். மாத்திரை போட்டுக் கொண்டு வேலைக்கு போவது இவர்களுக்குப் பிடிக்காத செயல் ஆகும்.

ஊசி போடுவது, ஆபரேஷன் செய்வது போன்றவை இவர்களுக்கு பிடிக்காது. இவை இல்லாமலேயே தங்களுடைய உடல் நலத்தை தங்களால் சீர் செய்து கொள்ள முடியும் என்ற ஆழமான நம்பிக்கை கொண்டவர்கள். இதனால் சிறந்த நாட்டு மருத்துவரைத் தேடி சென்று தன் நோய்க்கு தானே மருந்து தேடி தம்மை சரி செய்து கொள்வர்.

பத்தியம், கசப்பு கூடாது. கசப்பான மருந்துகள், காரமான மருந்துகள், பத்தியத்தோடு கூடிய மருந்து போன்றவை இவர்களுக்குப் பிடிக்காது. தன்னுடைய சுதந்திரத்திற்கும் சுகபோகத்திற்கும் எவ்வித இடையூறும் இல்லாத வகையில் தரப்படும் மருந்துகளை மட்டுமே இவர்கள் உட்கொள்வார்கள். இனிப்பு, நெய் போன்றவற்றை அதிகம் விரும்பும் இவர்கள், சர்க்கரை நோயாளிகளாக இருந்தாலும்கூட வெளியே தங்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது என்று காட்டிக் கொள்ளாமல், போகும் இடங்களில் எல்லாம் இவற்றை ருசி பார்ப்பார்கள். தன் வீடுகளில் சாப்பிடும்போது இவற்றை விலக்கி வைப்பார்கள்.

The post என்ன சொல்லுது உங்கள் ராசி: ரிஷப ராசிக்காரர்களின் நோயும் தீர்வும் appeared first on Dinakaran.

Tags : Rajeshwari Rishaparasi ,Venus ,
× RELATED சுக்கிரன் ராசியில், குரு சுகத்தைத் தருவாரா..?