×

தோவாளை கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு: ராதாபுரம் கால்வாயில் 9 இடங்களில் உடைப்பு

நாகர்கோவில்: தோவாளை கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதி தற்காலிகமாக பழுது பார்க்கப்பட்டதை அடுத்து இன்று பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. குமரியில் தோவாளை கால்வாய் மூலம் தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாக்களும், ராதாபுரம் கால்வாய் பகுதி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். ஆனால், இந்த கால்வாய் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முறையான பழுது பார்க்கப்படவில்லை. இதனால், கால்வாய் பெரும்பகுதி ஷட்டர்கள், கரைப்பகுதி கற்கள் பெயர்ந்து காணப்படுகின்றன. இதே நிலைதான், அனந்தனாறு சானல், என்.பி சானல், பி.பி சானல்களும். தமிழக அரசு பல நூறு கோடி பணத்தை ஒதுக்கினாலும், பணிகள் நடைபெறாமல் இருப்பது விவசாயிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடுக்கரை பகுதி, சீதப்பால் முதல் தோவாளை வரை கால்வாயின் இருபுறமும், பக்க சுவர்கள் பழுது பட்டும், கற்கள் பெயர்ந்தும் காணப்படுகின்றன.

கால்வாய்கள் பாசனத்திற்காக திறக்கப்படும் ஒரு சில நாட்கள் முன்னதாக பெயரளவிற்கு மட்டும் பணிகளை மேற்கொள்கின்றனர். இதுபற்றி பூதப்பாண்டி பொதுப்பணித்துறை உதவிபொறியாளரிடம் கடந்த 3 ஆண்டுகளாக புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், கடந்த சில நாட்கள் முன்பு உலக்கை அருவி பகுதியில், கால்வாயின் அடிப்பகுதியில் கற்கள் பெயர்ந்து காணப்பட்ட பகுதியில், தண்ணீர் அரிப்பால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. 10 மீட்டர் அகலத்தில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்யும் பணி தொடங்கி நேற்று நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, இன்று காலை தோவாளை கால்வாயில் மீண்டும் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
6 நாட்களாக செல்லாத அதிகாரி: ராதாபுரம் கால்வாயில் 9 இடங்களில் கடந்த 20ம் தேதி உடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உடைப்புகள் 26ம் தேதி வரை சரி செய்யப்படவில்லை.

இந்நிலையில், ராதாபுரம் கால்வாயில் ஆய்வுக்கு சென்ற செயற்பொறியாளர் அதிர்ச்சி அடைந்தார். உடைப்பை சரி செய்து, நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய நாகர்கோவில் கோட்ட பொறியாளர் நடவடிக்கை எடுக்காததால், அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் தக்கலை கோட்டபொறியாளர், ராதாபுரம் கால்வாய் உடைப்புகளை சரி செய்யும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதுபோல் பி.பி சானலில் ஏற்பட்ட 3 உடைப்புகளையும், செயற்பொறியாளர் மட்டுமே மேற்கொண்டு வருவது விவசாயிகளிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே குமரி பொதுப்பணித்துறையில், சொந்த ஊரில் இருந்து கொண்டு அலட்சியமாக செயல்படும், அதிகாரிகளை கூண்டோடு மாற்றி, விட்டு, வெளிமாவட்டங்களிலிருந்து, பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களை நியமிக்க பாசனத்துறை சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தோவாளை கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு: ராதாபுரம் கால்வாயில் 9 இடங்களில் உடைப்பு appeared first on Dinakaran.

Tags : Thovalai canal ,Radhapuram canal ,Nagercoil ,Doalai canal ,Dovalai ,Agastheeswaram ,Radhapuram ,Dovalai Canal ,Kumari ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...