×

தேனி மாவட்ட எல்லையில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒரு ஜாலி டூர்: குடும்பத்துடன் ஜில்..ஜில்…டிரிப் சென்று வரலாம்

கூடலூர்: புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒரு இன்ப சுற்றுலாவாக, பார்க்கும் இடம் எல்லாம் பச்சைப் பசேல் என கண்ணுக்கு குளிர்ச்சி, மண்வாசனை, நாசி துளைக்கும் பலாப்பழ வாடை இவையெல்லாம் கண்டு அனுபவிக்க, தேனி எல்லையில் ஒரு ஜாலி டிரிப்புக்கு சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வருகின்றனர். தேனி மாவட்டத்திற்கு அருகில் உள்ள ‘‘கடவுளினன் சொந்த நாடு’’ என்னும் இடுக்கி மாவட்டத்தில் உள்ள, பார்க்கவேண்டிய சில குளு…குளு இடங்கள்……

தேக்கடி:

தேனி மாவட்ட தமிழக எல்லை குமுளியிலிருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சர்வதேச சுற்றுலாத்தலம் தேக்கடி. முல்லைப்பெரியாறு அணையில் தேங்கி நிற்கும் நீர்தேக்கப் பரப்பின் இயற்கை சூழலில் வாழும் விலங்குகளை கண்டு ரசித்தவாறு படகுச்சவாரி செய்வது தேக்கடியின் சிறப்பு. மேலும் தேக்கடி வனப்பகுதியில் யானைச்சவாரி, டைகர்வியூ என சுற்றுலாப்பயணிகளை மகிழ்ச்சி அடையச்செய்யும் பல சிறப்பு அம்சங்களும் உண்டு. கேரள சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் வனத்துறையினரின் படகுகள் தேக்கடி நீர்தேக்கப்பரப்பில் சவாரி சென்று வருகிறது.

மூணாறு:

தென்னகத்து காஷ்மீர் என அழைக்கப்படும் மூணாறு கடல் மட்டத்திலிருந்து 1600 முதல் 1800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. முதிரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய 3 ஆறுகள் கூடுமிடமாதலால் மூணாறு ஆனது. மூணாறுக்கு அருகில் உள்ள, நீலகிரி வரையாடுகள் உள்ள இரவிகுளம் தேசியப்பூங்கா, இந்த பூங்காவிற்கு உள்ளே அமைந்துள்ள, தென்னிந்தியாவிலேயே உயரமான 2700 மீட்டர் உயரம் கொண்ட ஆனைமுடி சிகரம், மாட்டுப்பெட்டி கல்கட்டு அணை, ஏரி படகுச்சவாரி, கேரளாவின் முதல் நீர்மின் திட்டமான பள்ளிவாசல், அருகே உள்ள சின்னக்கனால் அதன் நீர்வீழ்ச்சியும் பார்த்து ரகிக்க வேண்டியவைகள். அனைத்து ரக கட்டணங்களிலும் தங்கும் விடுதிகள் உண்டு.

ராமக்கல்மேடு:

தேனி மேற்கு பகுதி தமிழக எல்லையான கம்பம்மெட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது ராமக்கல் மெட்டு. கடல் மட்டத்திலிருந்து சுமார் 5ஆயிரம் அடி உயரத்திலுள்ள இப்பகுதி ஆசியாவில் அதிக காற்றுவீசும் பகுதிகளில் ஒன்றாகும். இங்கு மணிக்கு 35 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இங்குள் குலும்பன் என்ற ஆதிவாசி குறவன், மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் 40 அடி உயர பிரமாண்டமான சிலை, மற்றும் குழுகு சிலை சுற்றுலாப்பயணிகளை கவரும். மலை உச்சிப்பகுதியிலுள்ள மின்சாரம் தயாரிக்கும் காற்றாலைகளையும், பைனாகுலர் முலம் தமிழகத்தின் இயற்கை எழிலையும், கண்டு ரசிப்பதும் கண்களுக்கு விருந்தாகும்.

இடுக்கி அணை:

கம்பம்மெட்டிலிருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது இடுக்கி. ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய அணையான இடுக்கி ஆர்ச்டேம் இங்குள்ளது. 839 அடி உயரமுள்ள குறவன் மலையையும், 925 அடி உயரமுள்ள குறத்திமலையையும் இணைத்து 555 உயரத்திற்கு கட்டப்பட்ட அணை இது. புத்தாண்டு விடுமுறை என்பதால் சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப் படுகின்றனர். 555 அடி உயர அணையில் ஸ்பீடு போட்டில் சவாரி செய்வது சுற்றுலாப்பயணிகளுக்கு திரில்லான அனுபவம். இதை அடுத்து செறுதோணி அணை, பார்க், மற்றும் மூலமட்டத்தில் உள்ள மிகப்பெரிய நீர் மின் உற்பத்தி நிலையம் பார்க்க கூடியவை.

பருந்தும் பாறை:

குமுளியிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்திலிருந்து ஐந்தாயிரம் அடி உயரத்தில் உள்ளது பருந்தும்பாறை. இங்குள்ள இயற்கை அழகும், தற்கொலை பாறை விளிம்புகளும், தாகூர் பாறையும் (மகாகவி ரவீந்திரநாத் தாகூரின் தலையைப்போன்ற அமைப்பு உள்ளதால் தாகூர்பாறை என பெயர்பெற்றது) குறிஞ்சி மலர்களும் ரசிக்கக் கூடியவை. சபரிமலை மண்டல காலத்தில் மகரஜோதியை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் இங்கே வருகின்றனர்.

வாகமண்:

குமுளியிலிருந்து ஏலப்பாறை வழியாக 45 கிலோமீட்டரில் உள்ளது வாகமண். கடல்மட்டத்திலிருந்து 5 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள வாகமண்ணில் தற்கொலை விளிம்பு, மொட்டைக்குன்றுகள், பைன்மரக்காடுகள், வாகமண் அருவி, பாரா கிளைடிங் பயிற்சி இடம், ஏரியில் கால்மிதி படகு சவாரி போன்றவை சுற்றுலாப்பயணிகள் கண்டு, அனுபவித்து ரசிக்க வேண்டியவை. இங்குள்ள பைன் மரக்காடுகளில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது வாகமண் திரைப்பட நகரமாக மாறி வருகிறது. கூட்ட நெரிசல் இல்லாத அற்புத மலைப்பிரதேசம். சுற்றுலாப்பயணிகளும் தங்கும் வகையில் பல்வேறு கட்டணங்களில் லாட்ஜ்கள் உண்டு.

கெவி:

தேக்கடி பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதிக்குள் அமைந்திருக்கு சுற்றுலாப்பகுதி கெவி. கேரள வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பகுதிக்கு சுற்றுலாப்பயணிகளை அழைத்துச் சென்று திரும்ப கேரள வனத்துறையின் ‘‘ஜங்கிள் சபாரி’’ என்ற பஸ் இயக்குகின்றனர். வண்டிப்பெரியாறு வள்ளக்கடவு வனத்துறை சோதனைச்சாவடியில் இருந்து 16 கிலோமீட்டர் வரை செல்லும் 3 மணிநேர பயணத்துக்கு நபர் ஒன்றுக்கு 500 ரூபாய் கட்டணமாகவும், 50 ரூபாய் நுழைவுக்கட்டணமாகவும் வசூலிக்கப்படுகிறது. வண்டியில் இருந்தவாறே வனவிலங்குகளை கண்டு ரசிக்கலாம். கெவி சென்று திரும்பும் வரை, இடையில் பயணிகள் வண்டியிலிருந்து இறங்க அனுமதிப்பதில்லை.

செல்லார் கோவில் மெட்டு:

குமுளியை அடுத்து 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செல்லார் கோவில்மேடு. இங்குள்ள அருவிக்குழி மலைப்பகுதியில் நீர்வீழ்ச்சி உள்ளதால் இதை கேரளாவில் அருவிக்குழி நீர்வீழ்ச்சி என அழைக்கின்றனர். இந்த அருவிக்குழி நீர்வீழ்ச்சி தான் தேனி மாவட்டம் கூடலூர் மந்தை வாய்க்கால் பகுதியில் வரும் சுரங்கனாறு நீர்வீழச்சி. மிக உயர்ந்த மலைப்பகுதி. இங்கிருந்து தமிழகத்தின் இயற்கை எழிலைக்காணலாம். தற்போது செல்லார்கோவில் வரும் சுற்றுலாப்பயணிகளுகளுக்காக அருவி உருவாகும் இடத்தில் செக்டேம் கட்டி கால்மிதி படகு (பெடல்போட்) அமைக்க இடுக்கி மாவட்டம் சக்குபள்ளம் கிராமப்பஞ்சாயத்தில் முடிவு செய்துள்ளனர்.

அஞ்சுருளி:

கம்பம்மெட்டில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் (கட்டப்பனையிலிருந்து ஏலப்பாறை செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில்) உள்ளது அஞ்சுருளி. இடுக்கி அணையின் ஆரம்பம் இதுவே. இரட்டையார் அணையிலிருந்து அஞ்சுருளிக்கு தண்ணீர் வரும் டணல் (குகை) இங்கு சிறப்பு மிக்கது. இரட்டையார் முதல் அஞ்சுருளி வரை 5.5 கிலோமீட்டர் நீளமும், 20 அடி அகலமும் உள்ள இந்த டணல் 1974&ல் தொடங்கி 1980&ல் முடிக்கப்பட்டது. ஐந்து உருளி (அண்டா) கவிழ்த்திவைத்ததுபோல் மலைகள் இருந்ததால் ஆதிவாசி குடிகள் இதற்கு அஞ்சுருளி எனப்பெயரிட்டுள்ளனர். ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடம்.

அய்யப்பன்கோவில் கோயில் மற்றும் தொங்குபாலம்:

கட்டப்பனையிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் பெரியாற்றின் குறுக்கே அய்யப்பன்கோவில் பஞ்சாயத்து மற்றும் காஞ்சியாறு ஊராட்சியை இணைக்கும் இரும்பு தொங்கு பாலம். 2012ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. திரைப்படங்களில் முலம் பிரபலமானது இந்த இந்த தொங்கு பாலம். தற்போது தனிப்பாடல்கள் மற்றும் திருமண ஆல்பங்களுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். தொங்கு பாலத்தின் இடதுபுறம் 200 மீட்டர் தூரத்தில் உள்ள பழமையான தர்மசாஸ்தா கோயில் மற்றொரு சிறப்பு பகுதியாகும். கனமழையின் போது இடுக்கி அணையில் இருந்து தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்போது கோயிலும் அதன் சுற்றுப்புறமும் நீரில் மூழ்கும். இந்த சமயங்களில் பக்தர்கள் தெப்பம் மற்றும் படகுகளில் கோவிலுக்குச் சென்று வழிபடுவர்.

அம்மச்சி கொட்டாரம்:

குமுளியிலிருந்து 35 கிலோமீட்டர் தூரத்திரல் குட்டிக்கானம் அருகே உள்ளது அம்மச்சி கொட்டாரம். குட்டிக்கானம் பனி படர்ந்த மலைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு 200 ஆண்டுகள் பழமையான அம்மாச்சிக்கொட்டாரம் (முன்பெல்லாம் ஆட்சியாளர்களின் மனைவிமார்கள் அம்மச்சி (அம்மா) என்று அழைப்பார்கள்) என்னும் அரண்மனை 25 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த வன மரங்களுக்கு நடுவே அமைந்துள்ளது. ராணி சேதுலக்ஷ்மி பாய், திருவிதாங்கூரின் கோடைகால தலைநகராக இந்த அம்மச்சிக்கொட்டாரத்தைப் பயன்படுத்தினார். பழமையான அரண்மனையை நேரில் பார்க்கும் போது சுற்றுலாப்பயணிகளுக்கு திகில் நிறைந்த பேய்மாளிகை படங்களை நினைவூட்டும். இவ்வளவு இயற்கை எழில் கொஞ்சும் குளுகுளு இடங்கள் நம் அருகில் இருக்க இந்த புத்தாண்டு விடுமுறையில் குடும்பத்துடன் ஒரு ஜாலி டிரிப் சென்று வரலாமே.

The post தேனி மாவட்ட எல்லையில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஒரு ஜாலி டூர்: குடும்பத்துடன் ஜில்..ஜில்…டிரிப் சென்று வரலாம் appeared first on Dinakaran.

Tags : New Year ,Theni district border ,Cuddalore ,Theni border ,Theni district ,Dinakaran ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!