×

திருவாரூர் மகளிர் கிளை சிறையில் கைதிகளுக்கு நூலகம் அமைத்து புத்தகங்கள் வழங்கல்

 

திருவாரூர்,டிச.30: தமிழ்நாடு மத்திய பல்கலைகழகம் சார்பில் திருவாரூரில் உள்ள மகளிர் கிளை சிறை கைதிகளுக்கு நூலகம் அமைத்து புத்தகங்கள் வழங்கப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மகளிர் கிளை சிறை கைதிகளுக்கு நூலகம் அமைத்து புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதில் சிறை கண்காணிப்பாளர் சசிகலாவிடம் புத்தகங்களை வழங்கி துணைவேந்தர் பேராசிரியர் கிருஷ்ணன் பேசியதாவது, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் சார்பில் பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், சோலார் விளக்கு, சுற்றுப்புற தூய்மை, இலவச மருத்துவ வசதி, பள்ளி நூலகம், மற்றும் கிராம நூலகங்களுக்கு புத்தகங்கள், மேஜை, நாற்காலி மின்விசிறி மற்றும் ஏராளமான சமூக சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. அதன்படி திருவாரூரில் உள்ள மகளிர் கிளை சிறையில் நூலகம் அமைக்கப்பட்டு புத்தங்கள் வழங்கப்பட்டுள்ளது.

நற்சிந்தனை, மொழி, வரலாறு, அறிவியல், தொழில்நுட்பங்கள் மற்றும் ஏராளமான தலைப்புகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே நற்சிந்தனைகளை வளர்த்து, குடும்பத்தையும் சமூகத்தையும், முன்னேற்ற வழிவகை செய்ய இந்த புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பேராசிரியர் திருமுருகன், நூலகர் முனைவர் பரமேஸ்வரன், நூலக உதவியாளர் சரசு, முனைவர் தனவந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post திருவாரூர் மகளிர் கிளை சிறையில் கைதிகளுக்கு நூலகம் அமைத்து புத்தகங்கள் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur Women's Branch Prison ,Tiruvarur ,Tamil Nadu Central University ,Tiruvarur Women's Branch Jail ,Neelkudi, Tiruvarur District ,
× RELATED ஒவ்வொரு துறையிலும் முதல்வனாக...