×

அமோனியா வாயு கசிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் உர தொழிற்சாலை சார்பில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருவொற்றியூர், டிச.30: எண்ணூரில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் உர தொழிற்சாலை சார்பில், கடலில் பாதிக்கப்பட்டுள்ள குழாய், கடந்த 2 நாட்களுக்கு முன் உடைந்து நள்ளிரவில் அமோனியா வாயு கசிந்தது. இதனால் பெரியகுப்பம், சின்ன குப்பம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் அமோனியா வாயு காற்றில் பரவி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம், இருமல், வாந்தி போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். இவர்கள், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இவ்வாறு பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்திய இந்த உர தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அந்நிறுவன நுழைவாயிலில் 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கடலில் அமோனியா வாயு கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தன. இதையடுத்து, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அடுத்த 7 நாட்களுக்கு நிறுவனத்தை செயல்படுத்த கூடாது, என்று தற்காலிக தடை விதித்தனர். இந்நிலையில், கடந்த 27ம் தேதி உரத் தொழிற்சாலை முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக 16 பேர் மீதும், இந்த போராட்டத்தின் போது அனுமதியின்றி பந்தல் மற்றும் ஒலி பெருக்கி அமைத்ததாக 2 பேர் மீதும் என 18 பேர் மீது எண்ணூர் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தனியார் உர தொற்சாலையின் அலட்சியப் போக்கு காரணமாக குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அமோனியா வாயு கசிந்து காற்றிலும், நீரிலும் கலந்தது. இதனால் பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழல் மற்றும் கடல் நீர் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி காற்று மற்றும் கடல் நீரில் அமோனியா குறிப்பிட்ட அளவை விட பல மடங்கு கலந்திருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். இதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் தான் காரணம். அதனால் அவர்கள் மீது வழக்கு பதிந்து இருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக நியாயத்திற்காக போராடிய பொதுமக்கள் மீது வழக்கு தொடர்ந்து இருப்பது ஏற்கக் கூடியது அல்ல. எனவே உர தொழிற்சாலையின் மீது தொழில்துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது மட்டும் அல்லாமல் சட்டபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிறுவனத்தின் சார்பில் 5 ஆண்டு கால இலவச மருத்துவ காப்பீடு, இழப்பீடு பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.

3வது நாளாக போராட்டம்
எண்ணூரில் உள்ள தனியார் உர தொழிற்சாலையின் குழாய் உடைந்து அமோனியா வாயு கசிந்ததால், பெரியகுப்பம், சின்ன குப்பம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல பகுதிகளில் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், மயக்கம், இருமல், வாந்தி போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட்டனர். எனவே, இந்த உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுப்பத்தில் மீனவர்கள் கடந்த 2 நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று 3வது நாளாகவும் போராட்டத்தை தொடர்ந்தனர்.

The post அமோனியா வாயு கசிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தனியார் உர தொழிற்சாலை சார்பில் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Coromandel International Ltd. ,Fertilizer Factory ,Ennore ,Periyakuppam ,Chinna Kuppam ,Dinakaran ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...