×

தமிழ்நாட்டில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ராமதாஸ் கடிதம்

சென்னை: தமிழகத்தில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதத்தினை வழங்கினார். சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை, பாமக நிறுவனர் ராமதாஸ் சந்தித்தார். அப்போது, சாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை கடிதத்தினை வழங்கினார். இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: தமிழ்நாட்டின் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ஆதரவான நிலையையே நீங்கள் எடுத்து வந்திருக்கிறீர்கள். அத்தகைய கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தும் என்று எண்ணி காத்திருப்பதா, தமிழ்நாடு அரசே அதன் அதிகாரத்தை பயன்படுத்தி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதா என்பது தான் நமக்கு இடையே உள்ள மாறுபட்ட கருத்து நிலைப்பாடுகளாகும்.நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதி 70 நாட்களாகி விட்ட நிலையில், அது தொடர்பாக ஒன்றிய அரசிடமிருந்து சாதகமான பதில் எதுவும் வரவில்லை.

அதனால் தான், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே சொந்தமாக நடத்த வேண்டும் என பா.ம.க. வலியுறுத்துகிறது. 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 69 சதவீத இடஓதுக்கீடு செல்லும்; ஆனால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி இட ஒதுக்கீட்டின் அளவை உறுதி செய்ய வேண்டும் என ஆணையிட்டது. இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாததால் 69 சதவீதம் இடஓதுக்கீட்டுக்கு எதிராக மீண்டும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பபடாவிட்டால், 69 சதவீதம் இட ஒதுக்கீட்டை காப்பாற்ற முடியாது.

பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இடஒதுக்கீட்டின் அளவு 70 விழுக்காட்டை கடந்து விட்ட நிலையில், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டின் அளவை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக உயர்த்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகையை சாதிவாரியாக கணக்கிட வேண்டும். அதற்கு சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம். எனவே, தமிழ்நாட்டின் தேவையையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் தமிழக அரசின் சார்பில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முன்வர வேண்டும். அதற்கான கால அட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என கோருகிறேன். இவ்வாறு எழுதியுள்ளார். இந்தநிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பாமக சட்டமன்ற கட்சி தலைவர் ஜி.கே.மணி, தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா ஆகியோர் உடனிருந்தனர்.

The post தமிழ்நாட்டில் சமூகநீதி காக்க சாதிவாரி கணக்கெடுப்பை அரசே நடத்த வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து ராமதாஸ் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ramadoss ,Chief Minister ,M.K.Stalin ,CHENNAI ,Bamako ,BAMA ,Chennai Secretariat ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...