×

சென்னை ஆர்.ஏ.புரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஐஐடி குழுவை நியமிக்கக்கோரி வழக்கு: வீட்டு வசதி வாரியம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்து ஐ.ஐ.டி., நிபுணர்களை கொண்டு ஆய்வு செய்ய கோரிய வழக்கில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த எஸ்.லீலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அண்ணாமலைபுரத்தில் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் ஒரு வீட்டை ரூ.1.23 கோடிக்கு வாங்கினேன். வீட்டிற்கான தொகை முழுவதையும் செலுத்தி விட்டேன். இந்த வீடு என்னிடம் கடந்த ஜனவரி மாதம் ஒப்படைக்கப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீட்டின் உள் அலகார வேலைகளை எல்லாம் செய்து முடித்து விட்டேன்.

அதே நேரத்தில் சுவர்களுக்கு பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட பல வேலைகளை வீட்டு வசதி வாரியத்தின் ஒப்பந்ததாரர் செய்து தரவில்லை. ஒப்பந்தப்படி பணிகளை செய்து தருமாறு கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தொடர்ந்து கோரிக்கை மனு கொடுத்தும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் நடவடிக்கை எடுக்கவில்லை. என்னை போல் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகளை வாங்கியவர்களும் கொடுத்துள்ளனர். இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் செயல்படுவதால்தான வீட்டு வசதி வாரியம் அய்யனம்பாக்கம் சுற்றி கட்டியுள்ள 5 ஆயிரம் வீடுகள், சோழிங்கநல்லூரை சுற்றியுள்ள ஆயிரம் வீடுகள் கடந்த 2020ம் ஆண்டு முதல் விற்பனையாகாமல் உள்ளன.

தரமற்ற பொருட்களை கொண்டு இந்த வீடுகளை கட்டியுள்ளதால், அந்த வீடுகளும் மோசமான நிலையில் உள்ளன. எனவே, சென்னை ஐ.ஐ.டி., நிறுவனத்தில் இருந்து நிபுணர்கள் குழுவை அமைத்து, வீட்டு வசதி வாரியம் கட்டிக் கொடுத்துள்ள எங்கள் அடுக்குமாடி குயிருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வீட்டு வசதி வாரியத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குனர், செயற்பொறியாளர் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post சென்னை ஆர்.ஏ.புரத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளை ஆய்வு செய்ய ஐஐடி குழுவை நியமிக்கக்கோரி வழக்கு: வீட்டு வசதி வாரியம் பதில் தர ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IIT ,RA Puram, Chennai ,CHENNAI ,Chennai High Court ,Tamil Nadu Housing Board ,Raja Annamalaipuram, Chennai ,R.A.puram, Chennai ,Housing Board ,Dinakaran ,
× RELATED சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ்...