×

பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு கோடிக்கணக்கில் பணம் பறிக்க திட்டம் பெரியார் பல்கலை.யில் மெகா மோசடிக்கு முயற்சி: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் நிறுவனம் தொடங்கி, எம்எல்எம் மாடலில் மெகா மோசடிக்கு முயன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக்தில், எந்தவித அனுமதியும் இன்றி பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனத்தை தொடங்கி, பல்கலைக்கழக பணத்தை முதலீடு செய்ததாக துணைவேந்தர், பதிவாளர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக தொழிலாளர் சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், கருப்பூர் போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன்பேரில் துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு, நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தொடர்ந்து துணைவேந்தர் மற்றும் பதிவாளரின் வீடு, அவர்களுக்கு தொடர்புடைய அலுவலகங்களில் 22 மணிநேரம் சோதனை நடத்திய போலீசார், ஏராளமான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பதிவாளர் தங்கவேல், இணை பேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனம் தொடங்கி அதன்மூலம், எம்எல்எம் மாடலில் கோடிக்கணக்கில் மெகா மோசடிக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: தமிழக அரசின் அனுமதியோ, பல்கலைக்கழக சிண்டிகேட்டின் அனுமதியோ இல்லாமல் பல்கலைக்கழகத்தில் எவ்வித செயல்பாடுகளையும் மேற்கொள்ள முடியாது. தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்பாட்டில் உள்ள பூட்டர் பவுண்டேசன், அப்ஸ்டாக் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை. ஆனால் பல்கலைக்கழக முகவரியில் இந்நிறுவனம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது.

துணைவேந்தர், பதிவாளர் உள்ளிட்டோர் பல்கலைக்கழக பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும், அந்த தனியார் நிறுவனத்தில் இயக்குநர்களாக இருப்பார்கள். இதில், பூட்டர் பவுண்டேசன் அதிவேகமாக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அவர்களுடன் இணைந்து சான்றிதழ் பட்டம், பட்டய, பட்டப்படிப்பு வழங்குவது, மாநாடுகள் நடத்துவது, ஆராய்ச்சிகள் செய்தல், டெக்னாலஜி டிரான்ஸ் செய்தல், தொழில்நுடப் பயிற்சிகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு கோடிக்கணக்கான நிதி பெற திட்டமிடப்பட்டுள்ளது. இதில், பல நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைகளும் நடந்துள்ளன.

இவற்றில் ஒருசில நிறுவனங்கள் நடத்தும் பாடங்களுக்கு பெரும் மதிப்பு உண்டு. இதனால் லட்சக்கணக்கில் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்து, ஆண்டுதோறும் பல கோடிகள் ஈட்ட முடியும் என்ற அடிப்படையில் பூட்டர் பவுண்டேசன் நிர்வாகிகள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர்.  பெரியார் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பூட்டர் பவுண்டேசன், முதலில் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடுகிறது. பின்னர் இரு நிறுவனங்களும் இணைந்து அடுத்தடுத்து பல நிறுவனங்களுடன் ஒன்றன்பின் ஒன்றாக புரிந்துணர்வு ஒப்பந்தம் போடுகின்றனர்.

இதுபோன்று தொடர்ச்சியாக எத்தனை நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டாலும், அதன்மூலம் பூட்டர் பவுண்டேசன் லாபம் அடையும் வகையில், செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட எம்எல்எம் போன்று இந்த அமைப்பு செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது. பூட்டர் பவுண்டேசன் மூலம் இயங்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் விருப்பம் போல பாடங்களை நடத்த முடியும். அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். அங்கு பாடத்திட்டம் குறித்தோ, அதன் தரம் குறித்தோ, கல்விக்கட்டணம் குறித்தோ, இட ஒதுக்கீடு குறித்தோ யாரும் எவ்வித கேள்வியும் எழுப்ப முடியாது.

முழுக்க, முழுக்க அரசு பெயரில் நடத்தப்படும், இந்த தனியார் நிறுவனம் மூலம் கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. இத்திட்டங்களுக்கு மூளையாக கேரளாவை பூர்வீகமாக கொண்ட புரோக்கர் ஒருவர் இருந்துள்ளார். இவர் தான் கொடுக்கல் வாங்கல், புரோக்கரிங், போலி ஆவணம் உருவாக்கம், போலி கம்பெனிகள் உருவாக்கம் என்ற சட்டவிரோத வேலைகளை துணைவேந்தர், பதிவாளர் ஆசியுடன் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் இருந்து செய்து வந்துள்ளார். எனவே அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

* தொழில்நுட்ப பரிமாற்ற மையம் பெயர் மாற்றம்?
தமிழகத்தில் உள்ள 9 பல்கலைக்கழகங்களில், கடந்த 2013ம் ஆண்டு அரசு தொழில்நுட்ப பரிமாற்ற மையங்கள் தொடங்க அரசு தலா ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இந்த மையத்தை அமைக்க, தற்போதைய பதிவாளர் தங்கவேலு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர், கணினி, தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் என ரூ.15 லட்சத்திற்கும் மேல் முறைகேடாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பின்னர், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப அடைகாப்பு மையங்களை நிறுவ, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்பட்டது. இதன்மூலம் ஆதாயம் அடையும் நோக்கில், பூட்டர் பார்க் பின்னர், பூட்டர் பவுண்டேசன் என்ற தனியார் நிறுவனங்களை அனுமதி பெறாமல் தொடங்கி விட்டனர். தற்போது முறைகேடு, விதிமீறல், கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம் ஆகியவை அம்பலமானதால், கடந்த 2013-ல் தொடங்கப்பட்ட தொழில்நுட்ப பரிமாற்ற மையம் தான், பின்னர் அடைகாப்பு மையமாகவும், தற்போது பூட்டர் பவுண்டேசனாகவும் மாற்றப்பட்டுள்ளது என மோசடிகளை மறைக்க முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

* பதிவாளரின் வங்கி கணக்கு ஆய்வு
பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தங்கவேல் மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டார். இந்த மோசடி விவகாரத்தில் அவரது வங்கி கணக்கிற்கு பணம் வந்து சென்றுள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய கருப்பூர் போலீசார் முடிவு செய்தனர். இதன்படி பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கனரா வங்கியில் பதிவாளர் தங்கவேலின் வங்கி கணக்கை நேற்று காலை முதல் கருப்பூர் இன்ஸ்பெக்டர் மனோன்மணி தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர். அதில் வங்கி அதிகாரிகளிடம் பல்வேறு விவரங்களை கேட்டறிந்தனர். பூட்டர் நிறுவனத்தின் இயக்குனராக இவர் இருப்பதால், அந்த நிறுவனத்துடனான வங்கி வரவு, செலவு எதுவும் உள்ளதா என்பது பற்றிய விரிவான சோதனையை போலீசார் நடத்தினர்.

The post பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டு கோடிக்கணக்கில் பணம் பறிக்க திட்டம் பெரியார் பல்கலை.யில் மெகா மோசடிக்கு முயற்சி: போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் appeared first on Dinakaran.

Tags : Periyar University ,Salem ,Salem Periyar University ,Booter Foundation ,
× RELATED பெரியார் பல்கலை. துணைவேந்தருக்கு ராமதாஸ் கண்டனம்..!!