×

எண்ணூரில் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டு மருத்துவ காப்பீடு: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

திருவொற்றியூர்: சென்னை எண்ணூரில் கடந்த 1963ம் ஆண்டு முதல் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் தனியார் ரசாயன உரத்தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 3 ஷிப்ட்டுகளில் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் இத்தொழிற்சாலைக்கு கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் திரவம் கொண்டு வரும் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது. இதில் எண்ணூர் பெரியகுப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வாயு கசிவு ஏற்பட்டதில் அப்பகுதி மக்களுக்கு கடும் மூச்சுத் திணறலுடன் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை மற்றும் திருவொற்றியூரில் ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, எண்ணூரில் வாயு கசிவினால் பொதுமக்களுக்கு பல்வேறு வகைகளில் பாதிப்பை ஏற்படுத்திய தனியார் ரசாயன உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் கடந்த 2 நாட்களாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே சமயத்தில், கடல்நீரிலும் வாயு கசிவு ஏற்பட்டதில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தபடி கரை ஒதுங்கின. இதைத் தொடர்ந்து, அத்தொழிற்சாலை இயங்குவதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தற்காலிக தடை விதித்தனர்.இந்நிலையில், தனியார் உரத்தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, கடந்த 2 நாட்களாக சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேர்மீதும், அதற்கு அனுமதியின்றி ஷாமியானா மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்திய 2 பேர் என மொத்தம் 18 பேர்மீது எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், எண்ணூரில் தனியார் உரத் தொற்சாலையின் அலட்சியப் போக்கு காரணமாக, அம்மோனியா திரவ குழாயில் உடைப்பு ஏற்பட்டு காற்றிலும் கடல்நீரிலும் நச்சு கலந்த வாயு கசிவு கலந்தது. இதனால் அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, சுற்றுச்சூழல் மற்றும் மீன் உள்பட பல்வேறு கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அத்தொழிற்சாலையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, வாயு கசிவு காரணமாக காற்று மற்றும் கடல்நீரில் குறிப்பிட்ட அளவைவிட பலமடங்கு அம்மோனியா கலந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கு சம்பந்தப்பட்ட தனியார் நிர்வாகம்தான் காரணம். அந்நிறுவனத்தின்மீது போலீசார் வழக்கு பதிந்து, உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதை விடுத்து, அந்நிறுவனத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எண்ணூர், திருவொற்றியூர் பகுதிகளில் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் 5 ஆண்டு கால இலவச மருத்துவ காப்பீடு மற்றும் உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post எண்ணூரில் வாயு கசிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆண்டு மருத்துவ காப்பீடு: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Thiruvatiyur ,Coramandal International Limited ,Chennai Oil ,
× RELATED வடசென்னை தொகுதிக்கு உட்பட்ட...