×

திறமை… வாய்ப்புக்கு இருக்கும் இடைவெளியை குறைக்கணும்!

நன்றி குங்குமம் தோழி

‘‘ஒரு பெண் படித்தால் ஒரு சமூகமே முன்னேறும்’’ என்ற பழமொழியினை உண்மையாக்கும் விதமாக, தன்னுடைய கல்வியினை பயன்படுத்தி கடலூர், கண்ணாரப்பேட்டை என்னும் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து பெண்களின் வாழ்வாதாரத்திற்கும், குழந்தைகளின் கல்விக்கும் பெரிதும் உதவியாக இருந்து வருகின்றார் ‘கனவு நிறுவனத்தின்’ உரிமையாளர்களுள் ஒருவரான, சென்னையை சார்ந்த நிஷா சுப்பிரமணியம்.

‘‘நான் படிச்சது ஊடகவியல். ஆனால் மற்றவர்களுக்கு கல்வி அறிவு புகட்ட வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. ஒரு பத்திரிகையாளராக நாம் எவ்வளவு எழுதினாலும் அதை படிக்க பிற மக்களுக்கு கல்வி அவசியம் என்பது அப்போதுதான் புரிய ஆரம்பிச்சது. அதனால் என்னுடைய கனவான கற்பித்தல் வேலைக்கு ஓர் அடித்தளமாக ‘Teach for India’ அமைப்பினர் மூலமாக அடி மட்டத்திலிருக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு பாடம் எடுக்க வாய்ப்பு கிடைச்சது. 2010- 2012 இரண்டு வருஷமும் மும்பையில் ஒரு பள்ளியில் முழு நேர ஆசிரியராக வேலை பார்த்தேன். 2017 வரை அதே அமைப்பின் கீழ் கல்வி சம்பந்தப்பட்ட வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன்’’ என்ற நிஷா தன்னுடைய கனவு வேலைக்காக சென்னையிலிருந்து கடலூர் சென்றதை விளக்குகிறார்.

‘‘எனக்கு கிராமப்புறங்களில் அடிமட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் வேலை செய்யணும் என்பது ஒரு ஆசை. அதை ஆசை என்பதை விட லட்சியம் என சொல்லலாம். அதன் மேல் எனக்கு இருந்த ஆர்வம் தான் கடலூரில் ASSEFA (Association of Sarva Seva Farm) அரசு சாரா அமைப்பு நடத்திய ஐந்து பள்ளிகளுடன் வேலை செய்ய வாய்ப்பு கிடைச்சது. இதற்காக சென்னையிலிருந்து கடலூருக்கு நானும் என் கணவரும் குடி வந்துட்டோம். இந்த அமைப்படன் சில காலம் வேலைப் பார்த்தோம். அதன் பிறகு நாங்க தனிப்பட்ட முறையில் ஆரம்பிக்கலாம் என்று விரும்பினோம். அப்படித்தான் ‘கனவு’ அமைப்பினை நான் என் கணவர் கவுதமுடன் இணைந்து துவங்கினேன்.

ஏற்கனவே நாங்க பள்ளி மாணவர்களுடன் இணைந்து செயல்பட்ட அனுபவம் இருந்ததால், அதையே தொடர ஆரம்பித்தோம். அந்த சமயத்தில் எங்க மாணவர்களின் அம்மாக்கள் தங்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரச்சொல்லி கேட்டார்கள். அதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் ‘சுரா’. முதலில் அங்குள்ள பெண்களுக்கு நாங்க தையல் பயிற்சி அளித்தது மட்டுமில்லாமல், அதற்காக பிரபல தையல் இயந்திர நிறுவனத்தில் இருந்து சான்றிதழ் பெற்று வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்தோம்.

Teach for Indiaவில் வேலை பார்க்கும் போது திரவீனா, சிவரஞ்சனியின் அறிமுகம் கிடைச்சது. நாங்க கனவு ஆரம்பித்த போது, அவர்கள் இருவரும் எங்களுடன் இணைந்து தற்போது நாங்க நான்கு பேரும் சேர்ந்து எங்க அமைப்பின் அனைத்து வேலைகளிலும் முழு நேரமாக ஈடுபட்டு வருகிறோம்’’ என்ற நிஷா பெண்களுக்கு மட்டுமில்லாமல், பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு தையல் மற்றும் கூடை பின்னுதல் போன்ற கைத் தொழில் பயிற்சி அளித்து வருவதாக கூறினார்.

‘‘எங்க அமைப்பின் முக்கிய நோக்கம் அடிமட்ட மக்களின் திறமையை வளர்த்து, அவர்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பதுதான். திறமை மற்றும் வாய்ப்புகளுக்கு இடையே இருக்கும் இடைவெளியினை குறைக்க வேண்டும். பொதுவாக இந்தியாவில் இருக்கும் அதிகபட்சமான மக்களின் வாழ்வாதாரத்தை அவர்களின் பிறப்பு, ஜாதி, குடும்ப சூழல்கள் தான் தீர்மானிக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் தாண்டி திறமை என்று ஒன்று இருக்கு.

திறமைக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தால், அவர்களின் வாழ்வியல் நிலை உயரும் என்பதில் சந்தேகமே இல்லை. அதை சுரா மூலம் நாங்க கண் கூடாக பார்த்து வருகிறோம். இங்கிருக்கும் பெண்கள் எல்லா விதத்திலும் தங்களை மெருகேற்றி கொள்ள அனைத்து உதவியும் நாங்க செய்து தருகிறோம். அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படாமல் கவனமாக பார்த்துக் கொள்கிறோம். நாங்க ஒரு ஆர்டரை எடுத்தாலும் அவர்களின் விருப்பத்தையும் கேட்போம். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று முடிவெடுக்க தைரியம் ஏற்படும்.

நாங்க ஆர்டர் எடுத்து தர அதற்கு ஏற்ப அவங்க தைத்து கொடுக்கிறாங்க. அதற்கான ஊதியமும் கொடுக்கிறோம். அது அவர்களுக்கு ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கு வேலை செய்யும் பெண்கள் பலர் பெரியதாக படிச்சதில்லை. மேலும் இன்றைய சூழலில் படித்தவர்களுக்கே சரியான வேலை இல்லாத போது, படிக்காத எங்களுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்ள ஒரு வேலை கிடைத்திருப்பது ரொம்ப உதவியா இருக்குன்னு சொல்லுவாங்க. நாங்க பெரும்பாலும் பைகள்தான் தைத்து கொடுக்கிறோம். இங்கு ஒரு தனி நபர் மட்டுமே ஒரு பையை தைப்பது கிடையாது. ஒரு பை முழுமையாக தரத்துடன் உருவாக அதற்கான வேலையினை இவர்கள் பகிர்ந்து செய்கிறார்கள்.

இதனால் ஒரு வாரத்தில் 1000 பைகளை எந்தவித குறை இல்லாமல் இவர்களால் தைத்து தர முடியும். லேப்டாப் பைகள் என்றால், வாரத்திற்கு 100 முதல் 250 வரை தைப்போம். சாதாரண பவுச் கைப்பைகள் முதல் back bag வரை அனைத்தையும் இவர்கள் தைப்பார்கள். எங்களின் டார்கெட், சொன்ன நேரத்தில் சொன்ன ஆர்டர்களை முடிக்க வேண்டும் என்பது தான். சில சமயம் தைப்பதற்கான துணிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்திருக்காது.

கொரியர் சேர தாமதமாகும். ஆனால் இந்த தடைகள் எல்லாம் எங்களின் வேலையை பாதிக்காதவாறு, குறித்த நேரத்தில் பைகளை அனுப்பிடுவோம். இந்த பைகள் எல்லாம் ரூ.35 முதல் ரூ.800 வரை அதன் அளவிற்கு ஏற்ப மாறுபடும். நகர வாழ்க்கையை விட்டுவிட்டு இங்கு இருக்கிறோம் என்று நான் ஒரு போதும் வருத்தப்பட்டது இல்லை. சொல்லப்போனால், இங்கு கிடைக்கும் மனநிம்மதி, சந்தோஷம் எனக்கு நகர வாழ்க்கையில் கிடைத்திருக்காது’’ என்று புன்னகையுடன் பதிலளித்தார் நிஷா சுப்பிரமணியம்.

கனவு நிறுவனம்

ராஜலட்சுமி – ‘‘நான் சுரா குழுவில் 2 வருஷமா வேலை பார்க்கிறேன். இதுதான் என்னுடைய முதல் வேலை. இந்த வேலை என் வாழ்க்கையில் எனக்கு கிடைச்ச நல்ல
விஷயம்னுதான் நான் சொல்லுவேன். இங்கு வேலை செய்யும் ஒவ்வொருவரின் குழந்தைகளுக்கான படிப்பு செலவுக்கு ‘கனவு நிறுவனம்’ சார்பாக ஸ்காலர்ஷிப் குடுக்குறாங்க. மீதி கட்டணத்தை என் சம்பளத்தில் நான் கட்டிடுறேன். அதே போல் என் குடும்பத்தில் பாதி செலவை நானே பார்த்துக்கிறேன். குடும்பத்திலும் சில முக்கியமான முடிவுகளை என்னால் எடுக்க முடியுது.’’

நான் சுரா குழுவில்…

திலகா – ‘‘நான் சுரா குழுவில் வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள்தான் ஆகுது. நான் படிக்கும் போதே தையல் வகுப்புக்கு போய் கொஞ்சம் கத்துக்கிட்டேன். அதனால் வீட்டிலிருந்தே சில துணிகளை தைத்து குடுத்துட்டு வந்தேன். ஆனாலும் குடும்பத்தோட செலவுகளை பார்த்துக்க போதிய பணம் இல்லாம இருந்தது. இங்க என்னை போல் நிறைய பெண்கள் வேலை செய்றாங்க. ஆர்டருக்கு ஏற்ப நாங்க பைகளை தைத்து தருவோம்.

ஆர்டர் இல்லாத போது சில பைகளை முன்கூட்டியே தைத்து வைக்கும் சின்னச் சின்ன வேலைகளை பார்ப்போம். எங்களுக்கு மாத சம்பளம் அல்லது இவ்வளவு தான் என குறிப்பிட்ட சம்பளம் கிடையாது. நாங்கள் தைக்கும் பைகளின் எண்ணிக்கை பொறுத்து எங்க சம்பளம் மாறும். அதையும் இரண்டு வாரத்திற்கு ஒரு முறையாக கொடுத்திடுவாங்க. வார சம்பளமாக கிடைக்கும் போது எங்களுக்கு மிகவும் உதவியா இருக்கு.’’

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post திறமை… வாய்ப்புக்கு இருக்கும் இடைவெளியை குறைக்கணும்! appeared first on Dinakaran.

Tags : Kungumum ,Cuddalore ,Kannarappet ,Dinakaran ,
× RELATED டயபர்கள் பயன்படுத்தலாமா?