×

கடன் தொல்லையால் விபரீதம் மனைவி, 2 மகள்களை கொன்று நகை தொழிலாளி தற்கொலை: மற்றொரு மகள் சீரியஸ்

திருமலை: கடன் தொல்லையால் உணவில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, 2 மகள்களை கொன்றுவிட்டு கணவரும் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலி பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணா (42), தங்க நகை தயாரிப்பு தொழிலாளி. இவரது மனைவி மாதவி (38). இவர்களது மகள்கள் வைஷ்ணவி (16), லட்சுமி (13), குசுமபிரியா (9).சிவராமகிருஷ்ணாவுக்கு சரிவர தொழில் இல்லாததால் குடும்பம் நடத்த முடியாமல் பலரிடம் கடன் வாங்கி வந்துள்ளார். வாங்கிய கடனுக்கு வட்டிகூட செலுத்த முடியாமல் தவித்துள்ளார்.

இந்நிலையில் கடன் கொடுத்தவர்கள் பலர் பணத்தை திருப்பி தரும்படி அடிக்கடி கேட்டுள்ளனர். இதனால் சிவராமகிருஷ்ணா சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரை விட்டு வெளியேறி அனகாப்பள்ளி பகுதி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். ஆனாலும் கடன் கொடுத்தவர்கள் அங்கும் தேடிவந்துபணம் கேட்டுள்ளனர். இதனால் சிவராமகிருஷ்ணா கடும் மனவேதனை அடைந்தார். 3 மகள்களை வைத்து எப்படி வாழப்போகிறோம்? என அவ்வப்போது தனது மனைவி மாதவியிடம் கூறி கண் கலங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினமும் கடன்காரர்கள் வீடு தேடிவந்ததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிவராமகிருஷ்ணா, தற்கொலை செய்து கொள்ளலாம் என மனைவியிடம் கூறியுள்ளார்.

அதற்கு மனைவி, `நாம் இருவரும் தற்கொலை செய்துகொண்டால் நமது மகள்கள் அனாதைகள் ஆகிவிடுவார்கள்’ எனக்கூறி சமரசம் செய்தாராம். இருப்பினும் அதனை ஏற்க மறுத்த சிவராமகிருஷ்ணா, தனது மனைவி மற்றும் மகள்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்றிரவு விஷம் வாங்கிக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அதனை யாருக்கும் தெரியாமல் உணவில் கலந்துள்ளார். இதையறியாமல் மனைவி மற்றும் மகள்கள் சாப்பிட்டுள்ளனர். தன் கண் முன்னால் தனது மனைவி மற்றும் மகள்கள் விஷம் கலந்த உணவை சாப்பிடுவதை பார்த்து சிவராமகிருஷ்ணா கதறியுள்ளார். பின்னர் அவரும் அந்த உணவை சாப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கி விழுந்தனர். இதில் சிவராமகிருஷ்ணா, மனைவி மாதவி, மகள்கள் வைஷ்ணவி, லட்சுமி ஆகியோர் படுத்த படுக்கையில் அடுத்தடுத்து இறந்தனர். தாய், தந்தை, சகோதரிகள் இறந்ததை பார்த்த 3வது மகள் குசுமபிரியா அலறினார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் குசுமபிரியாவை மீட்டு அனகாப்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த அனகாபள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்க அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post கடன் தொல்லையால் விபரீதம் மனைவி, 2 மகள்களை கொன்று நகை தொழிலாளி தற்கொலை: மற்றொரு மகள் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : SHIVARAMAKRISHNA ,TENALI AREA ,AP STATE GUNTUR DISTRICT ,
× RELATED ஆந்திராவில் 15ம் தேதி முதல் ஜாதிவாரி...