×

ஆன்மிகம் பிட்ஸ்: திருப்பரங்குன்றம் ஷண்மதச் சிறப்பு

வெள்ளை மயில்

மயில்களை அதற்குரிய இயல்பான நிறத்தில்தான் பார்ப்போம். ஆனால், திருப்பரங்குன்றத்தில் வெள்ளை மயில்களைக் காணலாம். சுப்பிரமணியரின் தரிசனத்திற்காக தேவர்களும், மகரிஷிகளும் வெள்ளைமயில் வடிவில் வருவதாக ஐதீகம்.

திருப்பரங்குன்றம் ஷண்மதச் சிறப்பு

திருப்பரங்குன்றத்தில் துர்க்கையின் வலது பக்கம் முருகன், இடது பக்கம் விநாயகர், முருகனுக்கு அருகில் மகாவிஷ்ணு, விநாயகருக்குப் பக்கத்தில் பரமேஸ்வரன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணாபத்யம் ஆகிய ஷண்மத தெய்வங்களையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும் அமைப்பு இத்தலத்தில் மட்டுமே உள்ள சிறப்பு என்பார்கள்.

ஆனை தாங்கும் ஆலயம்

காஞ்சிபுரம் திருத்தலத்தில் உள்ள ஆலயங்களில் வரதராஜப் பெருமாள் ஆலயம் முக்கியமானது. மூலவரான வரதராஜப் பெருமாள், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்துடன் காட்சி தருகிறார். இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையே மலை வடிவமெடுத்து பெருமாளை தாங்கியிருப்பதால் இந்த ஆலயம் வேதகிரி, அத்திகிரி என்ற பெயர்களால் அழைக்கப்
படுகிறது என்பார்கள்.

அரிய வகை கல்லினால் கோயில்

திருச்சிக்கு அருகில் உள்ள திருத்தலம் திருப்பைஞ்சீலி. இத்தலத்தில் நீலகண்டேஸ்வரர் கோயில் உள்ளது. இது உமாதேவி வழிபட்டதாகும். இக்கோயில் மதிலின் மேல்தளம் புலவரி கற்கள் என்ற அரிய வகை கற்களால் கட்டப்பட்டவை. இவ்வகை கற்கள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன. அதனால் இத்தலம் ‘வியாக்ரபுரி’ என்றும் பெயரைப் பெற்றுள்ளது.

இருவேறு வடிவங்களில் நடராசர்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகில் உள்ள திருத்தலம் ‘கடம்பந்துறை.’ இங்குள்ள கடம்பர் கோயிலில் இரு நடராச திருவுருவங்கள் உள்ளன. ஒரு திருவுரு வத்தில் நடராசரின் காலடியில் முயலகன் உள்ளது. மற்றொரு திருவுருவத்தில் முயலகன் உருவம் இல்லை.

சிவசக்தி வடிவ தலம்

திருவாரூர் மாவட்டம், தன்னிலம் அருகில் உள்ள திருத்தலம் ‘திருமீயச்சூர்’. இத்தலத்தில் சகல புவனேசுவரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள திருவுருவம் நேராகக் காணும்போது ஒருமுக அமைப்பும், மற்றொரு புறம் பார்க்கும்போது ஒரு அமைப்பும் உள்ளது ஒரு சிறப்பாகும். இக்கோயிலில் உள்ள அம்பாளுக்கு ஒரு பக்தை கோயிலில் வந்து கேட்டபோது கொலுசு போடும்படியான அமைப்பு இல்லை என்றுகூற, மனம் வருந்திய பக்தையின் கனவில் அம்பாள் தோன்றி, கொலுசு போட இடமுள்ளது என்று கூறவும், காலில் கொலுசு நுழைய வழி இருப்பது தெரிய வந்து கொலுசு போடப்பட்டு அம்பிகையின் விருப்பம் நிறைவேற்றப்பட்ட தலம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ராமலிங்கம் பெயரில் மூன்று

ராவணனை அழித்த ராமனுக்கு பிரம்மஹத்தி, வீரஹத்தி, சாயாஹத்தி எனப்படும் மூன்று தோஷங்கள் ஏற்பட்டன. இவை நீங்க இராமேசுவரம், வேதாரண்யம், பட்டீசுவரம் ஆகிய இடங்
களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமன். இந்த மூன்று தலங்களிலும் உள்ள சிவலிங்கங்கள் ‘ராமலிங்கம்’ என்ற பெயரிலேயே திகழ்கின்றன.

அரங்கன் சந்நதியில் சக்கரத்தாழ்வார்

திருச்சி, ஸ்ரீரங்கம் திவ்ய தேசத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் பாம்பணையில் கண் துயிலாதிருந்துள்ள பெருமாளுக்கு காப்பாக, அரங்கனுடைய சந்நதிக்கு வலப்புறத்தில் சக்கரத்தாழ்வார் அமையப் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்

The post ஆன்மிகம் பிட்ஸ்: திருப்பரங்குன்றம் ஷண்மதச் சிறப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruparangunram ,Tiruparangundram ,Devas ,Maharishis ,Subramaniam ,Murugan ,Durga ,
× RELATED கிரிவலப் பாதையில் உள்ள செடி, கொடி, மரங்களில் திடீரென தீ!