×

பிரதமர் மோடி வர உள்ள நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு: 6 நாள் டிரோன்கள் பறக்க தடை

திருச்சி: திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் திறப்பு விழா வரும் ஜன. 2ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு புதிய முனையத்தை திறந்து வைக்கிறார். முன்னதாக பாரதிதாசன் பல்கலைக்கழக 38வது பட்டமளிப்பு விழாவிலும் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சியை முடித்து விட்டு பாஜ முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் தனி விமானம் மூலம் லட்சதீவுக்கு புறப்பட்டு செல்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி விமான நிலைய புதிய முனையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு இடங்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று காலை திருச்சி விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணிக்கு இ.மெயில் ஒன்று வந்தது. அதில் அதானி வசம் ஒப்படைக்கப்பட உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் வெடிகுண்டு வெடிக்கும். திருச்சி விமான நிலையத்தில் உள்ள ஒரு விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது எப்போது வெடிக்கும் என்று தெரியாது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. 2ம் தேதி பிரதமர் வருகை தர உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியது.உடனே விமான நிலைய இயக்குனர் இதுபற்றி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினிக்கு தகவல் கொடுத்தார்.

விசாரணையில் ஐரோப்பிய சர்வரை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ வாடிக்கையாளர் சேவை அடையாளத்துடன் மின்னஞ்சல் வந்தது தெரியவந்தது. உடனே மாநகர போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் வெடிகுண்டு தடுப்பு மற்றும் செயலிழப்பு பிரிவினர் விமான நிலையம் முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். விமான நிலையத்துக்கு வந்த விமானங்களில் சோதனை நடந்தது. மேலும் பைக், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர்.

ஆனால் விமான நிலைய வளாகத்திலோ, விமானத்திலோ வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இமெயில் தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. அந்த இமெயிலை அனுப்பியது யார் என விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாநகர எல்லைக்குள் நேற்று முதல் வரும் ஜன.2ம் தேதி வரை 6 நாட்களுக்கு டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க கலெக்டர் பிரதீப்குமார் தடை விதித்துள்ளார்.

The post பிரதமர் மோடி வர உள்ள நிலையில் திருச்சி விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு அதிகரிப்பு: 6 நாள் டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,PM Modi ,Trichy ,Narendra Modi ,Bharathidasan University ,convocation ,Modi ,Dinakaran ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..!!