×

அமராவதி முதலைப்பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு

உடுமலை : மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட உடுமலை அருகே அமராவதி அணையின் முதலை பண்ணை பகுதியில் சுற்றுச்சூழல் கடை திறக்கப்பட்டது.
ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் கோட்டம் அமராவதி வனச்சரகம் சார்பில், அமராவதி அணைப்பகுதி அருகே கடந்த 1975 ம் ஆண்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், முதலை பண்ணை துவங்கப்பட்டது. இங்கு குட்டிகள் முதல் பெரியது வரை 84 சதுப்பு நில முதலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அமராவதி வனச்சரகத்தில் கரட்டுப்பதி, பாறையூர்,தளிஞ்சி, தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட மலை வாழ் மக்கள் குடியிருப்புகள் அமைந்துள்ளன. மலைவாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, தமிழக அரசு, வனத்துறை சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அமராவதி முதலைப்பண்ணை அருகே, கரட்டுப்பதி 75 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மலை வாழ் மக்கள் மேம்பாட்டிற்காக, சுழல் மேம்பாட்டு குழு அமைக்கப்பட்டு, வனைத்துறையுடன் இணைந்து, சுற்றுச்சூழல் கடை நேற்று திறக்கப்பட்டது. இங்கு முதற்கட்டமாக குடிநீர், ஐஸ்கிரீம், தேனீர், மீன்வறுவல், ஆனைமலை புலிகள் காப்பக சின்னத்தில் கீசெயின், டீ சர்ட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வருங்காலங்களில் சுற்றுலாபயணிகள் பயன்பெறும் வகையில், அவர்களது கருத்திற்கேற்ப உணவு வகைகளையும், மலைவாழ் மக்களின் கைவினைப் பொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சூழல் கடை திறப்பில், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராமசுப்பிரமணியம், இணை இயக்குனர் தேவேந்திரகுமார் பங்கேற்று திறந்து வைத்தனர். இதில் அமராவதி வனச்சரகர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் வனத்துறையினர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, ஆனைமலை புலிகள் காப்பக இயக்குனர் ராமசுப்பிரமணியம் முதலை பண்ணையில், பராமரித்து வரும் முதலைகள் மற்றும் அவற்றிற்கு வழங்கப்படும் உணவு குறித்தும், வரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான வசதிகள் குறித்தும் வனத்துறையினரிடம் ஆலோசனை செய்தார்.

மேலும் புதிதாக துவங்கப்பட்டுள்ள சூழல் கடையில் உணவுகளை தரமாகவும், சுகாதாரமாகவும், சுற்றுலா பயணிகள், மாணவர்களின் கருத்துக்களை கேட்டு, அவர்களின் விருப்பத்திற்கேற்ப வழங்க அறிவுறுத்தினார். தேர்வு விடுமுறை என்பதால் முதலை பண்ணைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

The post அமராவதி முதலைப்பண்ணை அருகே வனத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கடை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Forest ,Amaravati ,Udumalai ,Amaravati dam ,Anaimalai Tiger Reserve ,Tirupur Division ,Amaravati Forest Department ,
× RELATED அமராவதி வனச்சரகத்தில் இரை தேடி இடம் பெயரும் வனவிலங்குகள்