×

ரூ.3.20 கோடி செலவில் ஏரியின் கரையோரம் மரக்குடில்கள், டென்டுகள் அமைக்கும் பணி தீவிரம்

ஊட்டி : ஊட்டி ஏரி கரைகளில் ரூ.3.20 கோடி செலவில் மரக்குடில்கள், குடில்கள் மற்றும் டென்டுகள் ஆகியவை அமைக்கும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்திற்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.இவர்கள் இங்குள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பது மட்டுமின்றி இயற்கை சூழ்ந்த பகுதிகளில் தங்கி ஓய்வெடுக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்காக புறநகர் பகுதிகளில் உள்ள ரெசார்ட்டுகள் மற்றும் காட்டேஜ்களில் தங்கி ஓய்வெடுக்கின்றனர்.சிலர் வனப்பகுதிகளில் உள்ள ரெசார்டுகளில் தங்கவும் அங்கு மரங்களில் அமைக்கப்பட்டுள்ள மரக்குடில்கள், இயற்கை சூழ்ந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள குடில்களில் தங்கவும் விரும்புகின்றனர்.

மேலும், சிலர் இயற்கை சூழ்ந்த பகுதிகளில் தற்காலிக டென்டுகள் அமைத்து தங்கி மகிழ்கின்றனர்.இதற்கு தனியார் நிறுவனங்கள் பல ஆயிரம் கட்டணமாக வசூலித்த போதிலும் அதனைப் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் பலரும் இதுபோன்ற பகுதிகளுக்கு சென்று இயற்கை சூழலில் தங்க விரும்புகின்றனர். இந்நிலையில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ஊட்டியில் சுற்றுலாத்துறை சார்பில் ஏரி கரையின் மறு புறத்தில் தற்போது ரூ.3.20 கோடி செலவில் மரங்களில் அமைக்கப்படும் மரக்குடில்கள் மற்றும் குடில்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மரத்தினால் ஆன 4 குடில்கள்,2 ட்ரீ டாப் குடில்கள் மற்றும் 4 டென்டுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகள் வரும் கோடை சீசனுக்குள் முடித்து சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை இங்கு தங்கி செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த குடில்கள் அமைக்கும் பணிகளை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது பணிகளை விரைந்து முடிக்கவும் தரமான முறையில் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது, நீலகிரி மாவட்டத்திற்கு பல லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இயற்கையான சூழலில் தங்கி செல்வதற்கு ஆசைப்படுகின்றனர்.எனவே, சுற்றுலாத்துறை சார்பில் தற்போது ரூ.3.20 கோடி செலவில் ஊட்டி ஏரியின் கரையோரங்களில் ட்ரீ டாப் எனப்படும் மற குடில்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் குடில்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தவிர டென்டுகளும் அமைக்கப்பட்டு வருகிறது.இது குறைந்த கட்டணத்தில் சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்படும்.

இதனை சுற்றுலாப் பயணிகள் ஆன்லைன் மூலம் புக்கிங் செய்து தங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் இது போன்ற இயற்கைச் சூழலில் தங்கி செல்லும் வாய்ப்பு கிடைப்பது மட்டுமின்றி சுற்றுலாத்துறைக்கும் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.

The post ரூ.3.20 கோடி செலவில் ஏரியின் கரையோரம் மரக்குடில்கள், டென்டுகள் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty lake ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED இத்தாலியன் பூங்காவில் பூத்த மலர்கள்