×

ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாவில் ₹81.46 கோடியில் 33 ஏரிகளுக்கு கால்வாய்

*தொட்டி பாலமும் கட்டப்படுகிறது

கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை மற்றும் போச்சம்பள்ளி தாலுகாவில், ரூ.81.46 கோடி மதிப்பீட்டில் 33 ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய் வெட்டும் பணி மற்றும் தொட்டி பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி அணையின் கீழ்புறம், பெண்ணையாற்றின் குறுக்கே நெடுங்கல் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் இருந்து இடதுபுற கால்வாய் மூலம், பாரூர் ஏரிக்கு நீர் செல்கிறது.

பாரூர் ஏரியின் கிழக்கு பிரதான கால்வாய் நெடுகை 15.95 கி.மீ.,யில் வலது புறத்தில் ஒரு புதிய கால்வாய் வெட்டி, பெண்ணையாற்றில் வெள்ள காலங்களில் வரும் உபரிநீரை, போச்சம்பள்ளி மற்றும் ஊத்தங்கரை தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள் மற்றும் 8 தடுப்பணைகள் ஆகியவற்றுக்கு கொண்டு சென்று, பயன்பெறும் வகையில் இத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊத்தங்கரை தாலுகாவில் ரெட்டிப்பட்டி ஏரி, செங்கழுநீர் ஏரி, சின்னகொட்டக்குளம் ஏரி, செட்டிக்குளம் ஏரி, தாதனூர் கொங்கன் ஏரி, கோழிநாயக்கன்பட்டி ஏரி, மேட்டுத்தாங்கல் ஏரி, வேலம்பட்டி ஏரி, ஒன்னக்கரை ஏரி, மல்லாபுரம் ஏரி, தாசம்பட்டி ஏரி, பழையகோட்டை ஏரி, புளியந்தோப்பு ஏரி, பாப்பன் ஏரி, ஆண்டிச்சி ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு தண்ணீர் நிரம்பும் வகையில், கால்வாய்கள் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த திட்டப்பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் சரயு கூறியதாவது: போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகாக்களில் உள்ள 33 ஏரிகள், 8 தடுப்பணைகள் இணைக்கப்பட உள்ளது. இதற்காக புதிய வழங்கு கால்வாய்கள் மற்றும் தொட்டி பாலம் அமைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், சுமார் 724 ஏக்கர் நிலம் பாசன வசதியை பெறும். மேலும், ஈர்ப்பு மண்டலத்தில் உள்ள கிணறுகள் மூலம் 362 ஏக்கர் மற்றும் கால்வாய் செல்லும் நேர்பாட்டின் மூலம் 255 ஏக்கர் நிலம் என மொத்தம் 1,341 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும்.

இத்திட்ட மதிப்பீட்டு தொகை ரூ.81.46 கோடி ஆகும். இத்திட்டத்தின் நீர் சேவை 83.71 மில்லியன் கனஅடி ஆகும். இந்த நீரை 22 நாட்களில் வழங்க கால்வாய் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரதான கல்வாயின் நீளம் 15.87 கி.மீ ஆகும். இத்திட்டத்திற்கு 102.21 ஏக்கர் பட்டா நிலம் மற்றும் 9.28 ஏக்கர் புறம்போக்கு நிலம் தேவைப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம், ஆழ்துளை கிணறுகள் மற்றும் கிணறுகளின் நீர்மட்டம் உயரும்.

அத்துடன் ஆயக்கட்டு பகுதியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் பொதுமக்களின் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும், நீர்பாசனம் இல்லாத காலங்களிலும், ஆழ்துளை கிணறு மற்றும் கிணறுகளில் உள்ள நீர்மட்டம் மூலம், பயிர்கள் பாசன வசதி பெறும். விவசாயம் பெருகுவதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகி, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் உயரும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அறிவொளி, உதவி பொறியாளர்கள் காளிப்பிரியன், கார்த்தி, ஜெயக்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாவில் ₹81.46 கோடியில் 33 ஏரிகளுக்கு கால்வாய் appeared first on Dinakaran.

Tags : Othangaray ,Pochamballi Taluga ,Krishnagiri ,Othangari ,Krishnagiri Dam ,Pannaiyatar ,Oothankari ,
× RELATED பர்கூர் அருகே இளம்பெண் மர்ம மரணம்: உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதம்