×

வீணாக கடலில் கலக்கிறது பழையாற்றில் இருந்து பொய்கை அணைக்கு தண்ணீர்

*இணைப்பு கால்வாய் அமைக்க திட்டம்

நாகர்கோவில் : பழையாற்றில் இருந்து பொய்கை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் ஆய்வு பணியில் இருந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரல்வாய்மொழி வடக்குமலை அடிவாரத்தில் பொய்கை அணை அமைந்துள்ளது. 2000ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞரால் திறந்து வைக்கப்பட்டது. அணையின் உச்சநீர்மட்டம் 42.62 அடியாகும். அணையின் மொத்த நீளம் 1,202 மீட்டர் ஆகும்.

அணையில் இருந்து ஆற்று மதகு, கால்வாய் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதில் ஆற்று மதகு வாயிலாக கரும்பாட்டு குளம், தோவாளை பெரியகுளம், பொய்கை குளம், குட்டிகுளம், ஆரல்வாய்மொழி பெரியகுளம், வைகை குளம், கிருஷ்ணன் குளம், செண்பகராமன்புதூர் பெரியகுளம் ஆகிய குளங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.
கால்வாய் மதகு வாயிலாக கீழ பாலார் குளம், பழவூர் பெரியகுளம் அன்னுவத்து குளம், லெட்சுமி புதுகுளம், அத்திகுளம், சாலை புதுகுளம், தெற்கு சிவகங்கை குளம், மேலபாலார் குளம், ஆகிய குளங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. பொய்கை அணை வாயிலாக 1,357 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணைக்கு தண்ணீர் வருகின்ற சுங்கான் ஓடையில் இருந்து பிரிகின்ற இரப்பை ஆறு மூடப்பட்டதால் தண்ணீர் முழுவதும் சுங்கான் ஓடையில் இருந்து கடுக்கரை வழியாக பழையாற்றில் பாய்ந்தோட தொடங்கியது.இதனால் பொய்கை அணையில் தண்ணீர் வருவதற்கும், அணை நிரம்புவதற்கும் சிக்கல்கள் இருந்து வருகிறது. அணைக்கு தண்ணீர் வருகின்ற சுங்கான் ஓடையில் இருந்து பிரிந்து செல்லும் இரப்பை ஆற்றினை சீர் செய்து கரைகள் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனால் அதன் பிறகு அணைகளின் நீர்மட்டம் உயரத்தொடங்கியது. இருப்பினும் எல்லா ஆண்டும் பருவமழை காலங்களில் பொய்கை அணை உச்சநீர்மட்டத்தை எட்டுவது இல்லை. இந்த ஆண்டும் 42.65 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பொய்கை அணையில் தற்போது 19.20 அடி மட்டுமே நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் உச்சநீர்மட்டத்தை எட்டிய நிலையில் பொய்கை அணை நிலை மட்டும் நிரம்பாமல் இருப்பது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.

இந்தநிலையில் ஆரல்வாய்மொழி, குமாரபுரம் மற்றும் அருகே உள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நலன் கருதி தோவாளை சானலில் இருந்து காவல்கிணறு-நாகர்கோவில் நான்கு வழி சாலை ஓரம் வழியாக குட்டிப்பொத்தை வரை புதியதாக கால்வாய் அமைத்தோ, குழாய்கள் அமைத்தோ தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது.

இது தொடர்பாக நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ஒருவர் கூறுகையில், ‘பழையாற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கை தணிப்பதற்காக பழையாற்றின் உப நதிகளில் சிறிய நீர்த்தேக்கங்கள் அமைத்து இணைப்பு கால்வாய் மூலம் பொய்கை அணை வரை இணைப்பதற்கான முதல்கட்ட ஆய்வு பணிகள் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெறும்பட்சத்தில் குமாரபும், ஆரல்வாய்மொழி பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்கப்பெறும்’ என்றனர்.

The post வீணாக கடலில் கலக்கிறது பழையாற்றில் இருந்து பொய்கை அணைக்கு தண்ணீர் appeared first on Dinakaran.

Tags : Old River ,Poikai Dam ,Nagercoil ,Poigai Dam ,Aralvaimozhi North Hills ,Dinakaran ,
× RELATED கொளுத்தும் கோடை வெயில்; முக்கடல் அணை நீர்மட்டம் 0.9 அடியாக சரிந்தது