×

வனத்தில் இருந்து வெளியேறி பயிர்களை சேதப்படுத்திய 20 யானைகள் விரட்டியடிப்பு

*வனத்துறையினர் தீவிரம்

தேன்கனிக்கோட்டை : தேன்கனிக்கோட்டை அருகே, ஜவளகிரி வனத்தில் இருந்து வெளியேறிய 20 யானைகள், அகலகோட்டை கிராமத்துக்குள் புகுந்து ராகி, துவரை, முட்டைகோஸ், தக்காளி தோட்டங்களை நாசம் செய்தன. மல்லாபுரம் கிராமம் அருகே சுற்றித் திரிந்த யானைகளை, பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டியடித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, தளி, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் வனச்சரக பகுதிகளில் உள்ள காடுகளில் 200க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.

தற்போது கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசிய பூங்காவில் இருந்து இடம்பெயர்ந்த 100 யானைகள், ஜவளகிரி வனப்பகுதி வழியாக தேன்கனிக்கோட்டைக்கு வந்துள்ளன. இவை பல பிரிவுகளாக பிரிந்து குட்டிகளுடன் நொகனூர், பேவநத்தம், ஊடேதுர்கம், சானமாவு, என பல பிரிவுகளாக பிரிந்து காட்டில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் தினமும் இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயிகள் சாகுபடி செய்துள்ள ராகி, அவரை, துவரை, தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்டவற்றை நாசம் செய்து வருகின்றன. இரவு நேரத்தில் வரும் யானைகளை விரட்ட முடியாமல், விவசாயிகள் தவிக்கின்றனர்.

கடந்த வாரம் 60 யானைகள் கொண்ட கூட்டத்தை, வனத்துறையினர் ஜவளகிரி காட்டிற்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து அங்கிருந்து கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, ஜவளகிரி வனப்பகுதியில் இருந்து, மீண்டும் 20 யானைகள், குட்டிகளுடன் கூட்டமாக வனப்பகுதியில் இருந்து வெளியே வந்து, அகலகோட்டை அருகே கிராமங்களில் பயிரிட்டிருந்த ராகி, துவரை, முட்டைகோஸ், தக்காளி, பீன்ஸ், ரோஜா நர்சரி தோட்டங்களை சேதம் செய்துள்ளன.

மல்லாபுரம் கிராமம் அருகே சுற்றித் திரிந்த யானைகளை, பொதுமக்கள் பட்டாசு வெடித்து விரட்டினர். இதுகுறித்த தகவல் அறிந்த ஜவளகிரி வனத்துறையினர், ஜவளகிரி வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

The post வனத்தில் இருந்து வெளியேறி பயிர்களை சேதப்படுத்திய 20 யானைகள் விரட்டியடிப்பு appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Dhenkanikottai ,Javalagiri forest ,Akalakottai ,Mallapuram village ,Dinakaran ,
× RELATED சேலம் அருகே முட்டல் ஆணைவாரி நீர்வீழ்ச்சியில் குளிக்க வனத்துறை அனுமதி!!