×

தெற்கு மண்டலத்தில் ரூ.3.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

 

கோவை, டிச.29: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 89-வது வார்டு அன்பு நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான 11.60 சென்ட் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அதில், 4 கடைகளும் கட்டப்பட்டிருந்தது. இவற்றை, தாங்களாக முன்வந்து அகற்றிக்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், எவ்வித பதிலும் இல்லை.

இதையடுத்து, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் பிரேம் ஆனந்த், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி, உதவி நிர்வாக பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் நவநீதகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் நேற்று காலை அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

ஜே.சி.பி இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அதிரடியாக இடித்து அகற்றினர். அந்த இடத்தை முழுமையாக மீட்டனர். மீட்கப்பட்ட இடத்தின் சந்தை மதிப்பு ரூ.3.20 கோடி ஆகும். அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து ‘’இது மாநகராட்சிக்கு சொந்தமான இடம், யாரேனும் அத்துமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என எச்சரிக்கை போர்டு வைத்தனர். இந்த அதிரடி நடவடிக்கையை தொடர்ந்து, அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

The post தெற்கு மண்டலத்தில் ரூ.3.20 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Anbu Nagar ,89th Ward ,Coimbatore South Zone ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் மைவி3...