×

ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் திருவலம் அடுத்த குகையநெல்லூர் கிராமத்தில்

திருவலம், டிச.29: திருவலம் அடுத்த குகையநெல்லூர் கிராமத்தில் ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, திருவலம் அடுத்த குகையநெல்லூர் கிராமத்தில் உள்ள ஏரிப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து 25க்கும் மேற்பட்டோர் வீடுகளை கட்டியுள்ளது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, தாசில்தார் ஜெகதீஸ்வரன் பரிந்துரையின் பேரில், ஆக்கிரமிப்பு வீடுகளை உடனே அகற்ற வேண்டுமென காட்பாடி வட்ட நீர்வள ஆதாரத்துறைக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கடிதம் அனுப்பப்பட்டது. தொடர்ந்து, நீர்வள ஆதாரத்துறை மற்றும் வருவாய்துறையினர் போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி மக்கள் வீடுகளை அகற்ற ஒருமாதம் அவகாசம் கோரினர். ஆனால், அந்த கால அவகாசம் முடிந்தும் ஆக்கிரமிப்புகள் வீடுகள் அகற்றப்படவில்லை.

இந்நிலையில், நேற்று காட்பாடி நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் ராம்குமார் தலைமையில் பொன்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, திருவலம் எஸ்ஐ சிலம்பரசன், மேல்பாடி எஸ்ஐ தருமன் மற்றும் போலீசார், நீர்வளத்துறை, பொதுப்பணிதுறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்து அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்ததுடன், திருவலம்- பொன்னை நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், அங்கு குடியிருக்கும் பெண் ஒருவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி கொண்டு தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் மற்றும் போலீசார் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர். பின்னர், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு சிகி்ச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அதிகாரிகள் அங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு நிலவியது.

The post ஏரி ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதம் திருவலம் அடுத்த குகையநெல்லூர் கிராமத்தில் appeared first on Dinakaran.

Tags : Gugaiyanellur village ,Thiruvalam ,Vellore district ,Gadpadi taluk ,Tiruvalam ,
× RELATED ஊராட்சி செயலாளர் வீட்டில் விஜிலென்ஸ்...