×

பதிவுத்துறை இணையதளத்தில் மீண்டும் வெங்கலேரி கிராமம்

திருப்போரூர்: தினகரன் செய்தி எதிரொலியால், இணையதள பக்கங்கள் மேம்பாடு செய்தபோது, நீக்கப்பட்ட வெங்கலேரி கிராமம் மீண்டும் பதிவுத்துறை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதிவுத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலமாகவே செய்யப்படுகின்றன. இந்த பதிவுத்துறை இணையதளத்தை டாடா கன்சல்டன்சி நிறுவனம் பராமரித்து வருகிறது. கடந்த மாதம் இந்த இணையதளத்தின் பக்கங்கள் மேம்படுத்தப்பட்டன.

இந்நிலையில், இணையதள பக்கங்களை மேம்பாடு செய்தபோது குக்கிராமங்கள் நீக்கப்பட்டு, பிரதான கிராமங்கள் மட்டுமே இணைக்கப்பட்டன. இவ்வாறு குக்கிராமங்களை நீக்கம் செய்து இணையதளம் மேம்பாடு செய்யப்பட்டபோது, பிரதான கிராமங்களுள் ஒன்றான வெங்கலேரி என்ற கிராமமும் தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக பதிவுத்துறை இணையதளம் மூலமாக வெங்கலேரி கிராமத்தின் சொத்து பரிமாற்றங்கள், வில்லங்க சான்று கோருதல், ஆவணங்களின் சான்றிட்ட நகல் கோருதல், சொத்தின் வழிகாட்டி மதிப்பு பார்வையிடுதல் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது.

இதுகுறித்து திருப்போரூர் சார்பதிவகம் மூலமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. ஆனால், இப்புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தினகரன் நாளிதழில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மின் அஞ்சல் மூலமாக டிசிஎஸ் நிறுவனத்திற்கு, இப்பிரச்னை குறித்து தகவல் அனுப்பப்பட்டது. அதனடிப்படையில், இந்த தவறு சரி செய்யப்பட்டு, தற்போது வெங்கலேரி கிராமம் மீண்டும் பதிவுத்துறை இணையதளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

The post பதிவுத்துறை இணையதளத்தில் மீண்டும் வெங்கலேரி கிராமம் appeared first on Dinakaran.

Tags : Vengaleri ,village ,Tiruppurur ,Vengaleri village ,Dhinakaran ,Tata Consultancy ,Dinakaran ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...