×

காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: நாக்பூரில் கட்சி பிரசாரத்தை துவங்கிய ராகுல்காந்தி சூளுரை

நாக்பூர்: காங்கிரஸ் கட்சியின் 139வது நிறுவன நாளான நேற்று நாக்பூரில் மக்களவை தேர்தல் பிரசார துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, ஒன்றியத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் பாஜவை வீழ்த்தி மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்றும் அவர் சூளுரைத்தார். காங்கிரஸ் கட்சியின் 139வது நிறுவன நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நாக்பூரில் ‘நாங்கள் தயார்’ என்ற பெயரில் மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு காங்கிரஸ் ஏற்பாடு செய்தது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை இக்கூட்டத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி தொடங்கி உள்ளது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய கட்சித் தலைவர்கள் மற்றும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர். பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆற்றிய உரையில் பேசியதாவது: வரவிருக்கும் மக்களவை தேர்தல் இருவேறு சித்தாந்தங்களுக்கு எதிரான மோதலை பிரதிபலிக்கும். ஆர்எஸ்எஸ், பாஜவைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம். ஒன்றாக இணைந்து மகாராஷ்டிர மாநில தேர்தலையும், மக்களவைத் தேர்தலையும் சந்தித்து வெற்றி பெறுவோம். காங்கிரஸ் கட்சியில் சாதாரண தொண்டர் கூட கேள்வி கேட்கலாம்.

ஆனால் பாரதிய ஜனதா அப்படி இல்லை. அமலாக்கத்துறை முதல் சிபிஐ வரை அனைத்தையும் பாஜ கட்டுப்படுத்துகிறது. ஊடகங்களுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. பாஜவில் தொண்டர்களும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆர்எஸ்எஸ் வழிகாட்டுதலில் இயங்கும் பாரதிய ஜனதா கட்சி, இந்தியாவை சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி, பெண்கள் தலைமையில் வெண்மைப் புரட்சியும், விவசாயிகள் தலைமையில் பசுமைப் புரட்சியும், இளைஞர்கள் தலைமையில் தொழில்நுட்பப் புரட்சியும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் ஓபிசி 50 சதவீதமும் தலித்துகள் 15 சதவீதமும் பழங்குடியினர் 12 சதவீதமும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த துறையிலும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உச்சத்தை எட்டி உள்ளது. மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாத பாஜ, ஓபிசி, தலித் மற்றும் பழங்குடி மக்களுக்காக பாடுபடுவதாக மார்த்தட்டிக் கொள்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்டெடுக்க காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். இருவேறு சித்தாத்தங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டு வெற்றி பெறுவோம். பாரதிய ஜனதாவை வீழ்த்தி மீண்டும் ஆட்சி அமைப்போம். இவ்வாறு அவர் பேசினார். மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்க அடுத்த 100 நாட்கள் கட்சிக்காக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.

* குறைந்தபட்ச வருவாய் திட்டம் செயல்படுத்தப்படும்: கார்கே உறுதி
பொதுக்கூட்டத்தில் மராத்தியில் உரையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிகழ்ந்த மணிப்பூருக்கு செல்லாத பிரதமர் மோடி, வைர வியாபாரத்தை தொடங்க சூரத்துக்கு செல்கிறார். ஜனநாயகத்துக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்ற 146 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்கிறார்கள். எனவே, சர்வாதிகார மோடி ஆட்சியை அகற்றி ஜனநாயகத்தை காப்பாற்ற மக்கள் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், 2019ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் அளித்த வாக்குறுதியின் படி ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 வழங்கும் குறைந்தபட்ச வருவாய் திட்டம் செயல்படுத்தப்படும்.

The post காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: நாக்பூரில் கட்சி பிரசாரத்தை துவங்கிய ராகுல்காந்தி சூளுரை appeared first on Dinakaran.

Tags : Congress ,Rahul Gandhi ,Sulurai ,Nagpur ,Congress party ,day ,Lok Sabha ,Union ,RSS… ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…