×

உலக பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா உடனான பாரம்பரிய நட்புறவில் முன்னேற்றம்: அதிபர் புடின் பேச்சு

மாஸ்கோவ்: தற்போது நடந்து வரும் உலக பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா உடனான உறவு முன்னேற்றமடைந்து வருவதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையிலும் இந்தியா-ரஷ்யா இடையிலான நட்புறவு வலுவாக உள்ளது. உக்ரைன் மீது படையெடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்டவை ரஷ்யா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்தன. அதே போல, உக்ரைன்-ரஷ்யா போர் மீதான ஐநா விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்புகளிலும் ரஷ்யா ஆதரவு நிலைபாட்டையே எடுத்தது. மேலும், இந்த பிரச்னைக்கு அமைதி பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், 5 நாள் பயணமாக கடந்த 25ம் தேதி ரஷ்யா சென்ற ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அங்கு ரஷ்ய துணைப் பிரதமரும் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மந்துரோவை சந்தித்து பொருளாதார விவகாரயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தார். இந்நிலையில், அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று அதிபர் புடினை அவருடைய அரசு மாளிகையான கிரெம்ளினில் சந்தித்தார். அப்போது பிரதமர் மோடியின் கடிதத்தை அவரிடம் நேரடியாக ஒப்படைத்தார். அதனைப் பெற்று கொண்ட அதிபர் புடின், தற்போது நடந்து வரும் உலக பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடனான பாரம்பரிய நட்புறவு முன்னேற்றமடைந்து வருவதாக தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “பிரதமர் மோடியின் நிலை ரஷ்ய அரசுக்கு தெரியும். இந்த பிரச்னையில் உள்ள சிக்கல்கள் குறித்து மோடியிடம் பலமுறை பேசி இருக்கிறேன். இப்பிரச்னைக்கு அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் அவர் தீர்வு காண விரும்புகிறார் என்பதையும் அறிவேன். விரைவில் இது குறித்த கூடுதல் தகவல்களை கூட்டாக அறிவிப்போம். இந்தியா-ரஷ்யா தரப்பில் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள், தற்போதைய பிரச்னைகள் குறித்து கலந்து ஆலோசிக்கும் வாய்ப்பை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். பிரதமர் மோடி ரஷ்யா வருகை தர அழைப்பு விடுத்துள்ளேன்,” என்று கூறினார். இதற்கு , அடுத்தாண்டு பிரதமர் மோடி ரஷ்யா வருவதற்கான வாய்ப்புகள் இருக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் அதிபர் புடினிடம் உறுதி அளித்துள்ளார்.

The post உலக பிரச்னைகளுக்கு மத்தியில் இந்தியா உடனான பாரம்பரிய நட்புறவில் முன்னேற்றம்: அதிபர் புடின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : India ,President ,Putin ,Moscow ,Russia ,Ukraine ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினை போன்று ஜனநாயகத்தை...