×

தண்டையார்பேட்டை மண்டலம் முத்தமிழ் நகரில் குப்பை குவியலால் கொசு உற்பத்தி: அகற்ற கோரிக்கை

பெரம்பூர்: வடசென்னையில் பல்வேறு பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு தரம் பிரிக்கப்பட்டு அதன் பின்பு அழிக்கப்படுகின்றன. முன்னதாக, வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள், ஆங்காங்கே உள்ள காலி இடங்களில் கொட்டப்படுகின்றன. அவற்றை லாரிகள் முறையாக வந்து எடுத்து செல்லாதுதால் குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், 35வது வார்டுக்கு உட்பட்ட முத்தமிழ் நகர் 2வது பிளாக் 50வது தெரு அம்பேத்கர் மன்றம் அருகே உள்ள காலி இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை தினமும் லாரிகளில் அகற்றாததால், கொசு உற்பத்தி மற்றும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஊழியர்களை தொடர்பு கொண்டு குப்பை அதிக அளவு உள்ளது என்று கூறினால், அப்போது மட்டும் குப்பையை அகற்றி விடுகின்றனர். மீண்டும் மறுநாள் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பை அந்த இடத்தில் கொட்டப்பட்டு அவற்றை அகற்ற மீண்டும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் எப்போதும் குப்பை அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட அந்த இடத்தை சுத்தம் செய்து வெளிப்பகுதியில் இருந்து எடுத்து வரப்படும் குப்பையை அங்கு கொட்டாமல் நேரடியாக கொடுங்கையூர் குப்பை கிடங்கிற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

The post தண்டையார்பேட்டை மண்டலம் முத்தமிழ் நகரில் குப்பை குவியலால் கொசு உற்பத்தி: அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Muthamil town ,Thandaiarpet ,Perambur ,North Chennai ,Kodungaiyur ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...